தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், தருமபுரி மாவட்டத்தில் உள்ள பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க முதன்முறையாக 'பெண்கள் பாதுகாப்புக் குழு' தொடங்கிவைக்கப்பட்டது.
இதில், பெண் காவல் ஆய்வாளர் ஒருவர், பெண் காவல் உதவிஆய்வாளர் ஒருவர் உள்பட ஆறு பெண் காவலர்கள் நியமிக்கப்பட்டு அவர்களுக்கு தனித்தனியாக நான்கு சக்கர வாகனம் மற்றும் பொதுமக்கள் எளிதில் தொடர்பு கொள்ள அலைபேசி எண் :9585585154 வழங்கப்பட்டுள்ளது.
பெண்கள் பாதுகாப்புக் குழுவை சேலம் சரக டிஐஜி பிரதீப்குமார் கொடியசைத்து தொடங்கிவைத்தார். இந்த நிகழ்ச்சியில் தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்குமார், பென்னாகரம், அரூர், பாலக்கோடு, மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய சேலம் சரக டிஐஜி பிரதீப்குமார், "இந்தப் பெண்கள் பாதுகாப்புக் குழுவானது பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல், பெண்களுக்கு இலவச சட்ட உதவிகள் செய்தல், பெண் குழந்தைகள் திருமணம் தடுப்பு, பெண்களுக்கெதிரான குற்றச் சம்பவங்கள் நடக்கும் இடங்களுக்கு உடனடியாகச் சென்று பாதுகாத்தல் உள்ளிட்ட 23 வகையான பணிகளை மேற்கொள்ளும்" என்றார்.