தருமபுரி பகுதிகளில் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்ததாக தகவல்: காரணம் இதுவா? தருமபுரி:தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே செம்மன்குழிமேடு என்ற கிராமம் உள்ளது. இப்பகுதியில் சட்டவிரோதமாக குழந்தையின் பாலினத்தை அறிந்து, கருக்கலைப்பு செய்தல் உள்ளிட்ட சட்ட விரோத செயல்கள் நடைபெற்று வருவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி, மருத்துவம் மற்றும் ஊரக நல பணிகள் இணை இயக்குநர் சாந்தி தலைமையிலான மருத்துவக் குழுவினர் செம்மன்குழிமேடு கிராமத்தில் உள்ள சுபாஷ் (28) என்பவரின் வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது தருமபுரி, அழாகபுரி பகுதியைச் சேர்ந்த கற்பகம் (38) என்ற பயிற்சி செவிலியர் சட்ட விரோதமாக 7 கர்ப்பிணி பெண்களுக்கு ஆணா, பெண்ணா என்ற பாலின பரிசோதனை மேற்கொண்டபோது கையும் களவுமாக பிடிபட்டார். மேலும், இதற்கு உடந்தையாக இருந்த அவரது கணவர் விஜயகுமார் (35), இடைத்தரகர் சிலம்பரசன் (31), ஆட்டோ ஓட்டுநர் செல்வராஜ் (35), வீட்டின் உரிமையாளர் சுபாஷ் (28) ஆகிய 5 நபர்களை காரிமங்கலம் போலீசார் கைது செய்தனர்.
இதையும் படிங்க: “ஹலோ நான் திருடன் பேசுறேன்”.. வடிவேலு பாணியில் பேரம் பேசிய நபர் சிக்கியது எப்படி?
மேலும், அவர்களிடமிருந்த ஸ்கேன் இயந்திரம், 4 செல்போன்கள், 2 சொகுசு கார் 1 ஆட்டோ உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்து அவர்களை சிறையில் அடைத்தனர். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட மருத்துவ இணை இயக்குநர் சாந்தி, “சட்டவிரோதமாக வயிற்றில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என பரிசோதனை செய்து கொண்டிருந்த சட்டவிரோத கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து கண்காணிப்புக் குழுவும், மாவட்ட சுகாதாரத் துறை குழுவும் தொடர்ந்து கண்காணித்து பிடித்திருக்கிறோம். இதில் தொடர்புடைய கற்பகம் என்ற பெண், அவரது கணவர், ஆட்டோ ஓட்டுநர், இடைத்தரகர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 7 பெண்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என கண்டறிந்து கருவில் உள்ளது பெண் குழந்தை என தெரிந்தால் அழிக்க இன்னும் மக்கள் முயற்சி செய்கிறார்கள்.
இதன் காரணமாக தருமபுரி மாவட்டத்தில் நல்லம்பள்ளி, காரிமங்கலம் வட்டங்களில் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்துள்ளது. பிறப்பு விகிதம் குறைவது குறித்து தொடர்ந்து மருத்துவத் துறையினர் கண்காணித்து வருகின்றனர்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: அதிக வட்டி தருவதாக ரூ.300 கோடி மோசடி! நிறுவனத்தால் வாடிக்கையாளர்களிடம் சிக்கிக் கொண்டதாக முகவர்கள் புகார்!