தருமபுரி:தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் சுற்றுலாத்தலத்திற்கு இன்று (மே.1) காலை முதலே சுற்றுலாப் பயணிகள் குவியத் தொடங்கினர். இன்று மே தினம் மற்றும் பள்ளிகள் விடுமுறையை முன்னிட்டு தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் எனப் பலதரப்பினரும் தங்களது வாகனங்களில் ஒகேனக்கலுக்கு வந்தடைந்தனர். பள்ளிகளுக்குத் தொடர் விடுமுறை காரணமாக, ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஒகேனக்கலுக்கு வருவதால், ஒகேனக்கல் பகுதியில் இருந்து சுமார் 8 கிலோமீட்டர் அளவிற்கு சுற்றுலா வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.
சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததால் ஒகேனக்கல் மெயின் அருவி, சினி அருவி மற்றும் மெயின் அருவிக்கு செல்லும் பகுதி உள்ளிட்ட இடங்களில் உள்ள ஆற்றில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குளித்து கொண்டாடினர். ஒகேனக்கல் பகுதி சுற்றுலாப் பயணிகள் நிறைந்து காணப்படுகிறது. மேலும், தொங்கு பாலம் பகுதியில் இருந்து காவிரி ஆற்றின் அழகை ரசித்து வருகின்றனர்.