தருமபுரி: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை குறைந்ததாலும், கர்நாடக அணைகளில் நீர் திறப்பு குறைக்கப்பட்டதால், காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு கடந்த 10 நாட்களாக விநாடிக்கு 300 கன அடியாக நீர்வரத்து இருந்தது. இந்நிலையில் தற்பொழுது கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் நல்ல மழை பெய்து வருகிறது.
காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட வனப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் காவிரி ஆற்றில் நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியுள்ளது.நேற்று முன் தினம் காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வினாடிக்கு 300 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை நிலவரப்படி அதிகரித்து விநாடிக்கு 1000 கன அடியாக உயர்ந்தது.
தொடர் மழையால், காவிரி ஆற்றில் நீர்வரத்து மேலும் அதிகரித்து, இன்று காலை வினாடிக்கு 4000 கன அடியாக உயர்ந்துள்ளது. கடந்த 4 மாதமாக விநாடிக்கு 1000 கன அடிக்கு கீழ் குறைந்த அளவே நீர்வரத்து இருந்து வந்த நிலையில், தற்பொழுது தொடர்ந்து கோடை மழை பெய்து வருவதால், நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் கோடை கால சீசனை கொண்டாட சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து வரும் என்பதால், ஒகேனக்கல் சுற்றுலாவை நம்பியுள்ள தொழிலாளர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.