தருமபுரி: தருமபுரி, பென்னாகரம், பாலக்கோடு, அரூர், பாப்பிரெட்டிபட்டி ஆகிய காவல் உட்கோட்டங்களில் உள்ள பகுதிகளில் காவல்துறையில் பணியாற்றும் காவல் துணை கண்காணிப்பாளர், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், சிறப்பு உதவி ஆய்வாளர்கள், தலைமைக் காவலர்கள், காவலர்கள் என 1,500க்கும் மேற்பட்ட காவலர்கள் பணியாற்றி வருகின்றனர்.
மேலும், தருமபுரி மாவட்டத்தில் பணியாற்றும் காவலர்கள் ஆண்டுக்கு ஒருமுறை துப்பாக்கி சுடும் நினைவூட்டல் பயிற்சி காவல்துறை சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில், இன்று தருமபுரி மாவட்டத்தில் பணியாற்றும் காவலர்களுக்கான துப்பாக்கி சூடும் நினைவூட்டல் பயிற்சி, தருமபுரி அடுத்த ஒடசல்பட்டி அருகே உள்ள துப்பாக்கி சுடும் பயிற்சி மைதானத்தில், ஆயுதப்படை காவல் ஆய்வாளர் செல்வமணி மேற்பார்வையில் நடைபெற்று வருகின்றது.
10 நாட்கள் நடைபெறுகிற இந்த நினைவூட்டல் பயிற்சியில், தினந்தோறும் 100 முதல் 150 காவலர்களுக்கு காவல் உதவி ஆய்வாளர் சின்னசாமி துப்பாக்கி சுடும் நினைவூட்டல் பயிற்சியை வழங்கி வருகிறார். இந்த பயிற்சியில் துப்பாக்கியைப் பிடிக்கின்ற விதம், சுடுவதற்குத் தயாராவது, எவ்வாறு துப்பாக்கியை கையாள வேண்டும் என்பது குறித்த பயிற்சியை உதவி ஆய்வாளர் சின்னசாமி வழங்கி வருகிறார்.