வனப்பகுதியில் பயிற்சி காவலர்களுக்குத் துப்பாக்கிச் சுடும் பயிற்சி - பயிற்சி காவலர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி
தர்மபுரி: வனப்பகுதியில் 300 பயிற்சி காவலர்களுக்குத் துப்பாக்கிச் சுடும் பயிற்சி அளிக்கப்பட்டது.

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வுசெய்யப்பட்ட இரண்டாயிரத்து 500 பெண்கள் உள்பட ஏழாயிரத்து 880 பேர்களுக்கு 28 பயிற்சி பள்ளிகளில் பயிற்சி வழங்கப்பட்டுவருகிறது.
இதில் தர்மபுரி, போச்சம்பள்ளி பயிற்சி பள்ளிகளில் பயிற்சி காவலர்களுக்கு உடற்பயிற்சி, திறன் பயிற்சி, சட்டம் ஒழுங்கு குறித்து பயிற்சி உள்பட பல்வேறு பயிற்சிகள் மே மாதம் 5ஆம் தேதி முதல் நடைபெற்றுவருகின்றன. தற்போது காவலர்களுக்கு பயிற்சி முடிந்து டிசம்பரில் பணிக்கு அனுப்பப்பட உள்ளனர்.
இந்நிலையில் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சேர்ந்த பயிற்சி காவலர்களுக்குத் துப்பாக்கிச் சுடும் பயிற்சி தர்மபுரி அருகே உள்ள ஒடசல்பட்டி மலைப்பகுதியில் தொடங்கியது.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பட்டாலியனில் உள்ள பயிற்சி காவலர்கள் 300 பேருக்குத் துப்பாக்கிச் சுடும் பயிற்சி தொடங்கியது. பயிற்சிப் பள்ளி முதல்வர் ரவிச்சந்திரன், துணை முதல்வர் வெங்கடேசன் ஆகியோர் தலைமையில் நிறைவு பயிற்சியாகத் துப்பாக்கிச் சுடும் பயிற்சி நடைபெற்றது.
இதில் நாளொன்றுக்கு 75 பேர் வீதம் நான்கு நாள்களுக்கு ஒடசல்பட்டி மலைப்பகுதியில் நடந்துவருகிறது. இதில், ஐந்து வகையான துப்பாக்கிகளில் 35 சுற்றுகளாகப் பயிற்சி காவலர்களுக்குப் பயிற்சிகள் வழங்கப்பட்டுவருகின்றன.
இதனால் ஒடசல்பட்டி மலைப்பகுதியில் வெளியாள்கள், கால்நடைகள் வராதபடி காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.