தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே எலந்த கோட்டப்பட்டி அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட நடுநிலை பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகள் மலை கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், அறிவியல் வகுப்புகளில், மாணவர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில் ஆசிரியர்கள் பல பயிற்சிகளை செய்து வந்துள்ளனர்.
இந்நிலையில், இன்று இந்திய அரசியலமைப்பு சட்ட தினத்தையொட்டி எலந்த கோட்டப்பட்டி அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட நடுநிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இந்தக் கண்காட்சியில் மாணவ, மாணவிகளுக்கு அறிவியலில் ஆர்வத்தை தூண்டவும், மாணவ மாணவிகளை புதிய புதிய கண்டுபிடிப்புகளை தெரிந்து கொள்ளவும், தாங்களும் அறிவியலில் பல்வேறு படிநிலைகளை எட்டவேண்டும் என்ற மனநிலையை தூண்டுவதற்காக இரண்டு வகையான சிறிய வகை ராக்கெட்டுகள் விண்ணில் ஏவியும், ராக்கெட் விண்ணில் ஏவப்படும் முறைகளையும் செய்து காட்டினா்.
மாணவர்கள் முன்னிலையில் சிறிய ரக ராக்கெட்டுகளை விண்ணில் ஏவுவதற்கு கும்பகோணத்திலிருந்து பொறியியல் பட்டதாரி இளைஞர்கள் வரவழைக்கப்பட்டு இருந்தனர். இதில், சுமார் 200 அடி உயரத்திற்கு செல்லும் வகையில், அவர்கள் தயாரித்திருந்த இரண்டு சிறிய ரக ராக்கெட்டுகளில், ஒன்று சாதாரணமாகவும், மற்றொன்று பாராசூட் பொருத்தி செய்துகாட்டினர்.