நவீன வசதிகளுடன் செயல்பட்டு வருகிற தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இறந்த உடல்களை மருத்துவர்கள் இல்லாமல் துப்புரவு பணியாளர்களே உடல் கூறாய்வு செய்யும் காணொலிக் காட்சிகள் சமூகவலைதளங்களில் வேகமாக பரவிவருகிறது.
இந்த மருத்துவமனையில் தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் உள்நோயாளிகளாகவும், புறநோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.
மேலும் தருமபுரி மாவட்டத்தை சுற்றியுள்ள பகுதிகளில் விபத்து, கொலை, தற்கொலை சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் உடல்கள் இந்த மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக கொண்டு வரப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த சில தினங்களாக தருமபுரி அரசு மருத்துவமனையில் உள்ள பிணவறையில் மருத்துவர்கள் இல்லாமலேயே உதவியாளர்கள், துப்புரவு பணியாளர்கள் இணைந்து இறந்தவர்களின் உடலை உடற்கூறு ஆய்வு செய்கின்ற காணொளி, சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த காணொளியில் மருத்துவர் இல்லாமல் இறந்தவரின் உடலை உதவியாளர், துப்புரவு பணியாளர் என மூன்று பேர் உடற்கூறு ஆய்வு செய்கின்ற காட்சி பதிவாகியுள்ளது.