தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அறுவை சிகிச்சையின்றி மூச்சுக்குழாயில் சிக்கிய உணவை அகற்றும் அரசு மருத்துவர்கள்!

தர்மபுரி: மூச்சுக் குழாயில் தவறுதலாக சிக்கிய உணவுப் பொருள்களை எந்தவித அறுவை சிகிச்சை இல்லாமல் தர்மபுரி மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள் அகற்றிவருகின்றனர்.

மூச்சு குழாயில் சிக்கிய உணவு
மூச்சு குழாயில் சிக்கிய உணவு

By

Published : Jan 9, 2021, 3:36 PM IST

Updated : Jan 9, 2021, 4:07 PM IST

சிறு வயது குழந்தைகள் உணவுப் பொருள்களான வேர்க்கடலை, பட்டாணி, பாதாம், சிக்கன் எலும்புத்துண்டு, பழங்களின் விதைகள், சிறு கற்கள் ஆகியவற்றைச் சாப்பிடும்போதோ அல்லது வாயில் வைத்து விளையாடிக் கொண்டிருக்கும்போதோ தவறுதலாக அத்தகைய பொருள்கள் அவர்களுக்குத் தெரியாமலேயே மூச்சுக்குழாய், நுரையீரல் பகுதிகளில் சிக்கிவிடுவது வாடிக்கை. இதனால் சில சமயம் உயிழப்பும் ஏற்படும். அவ்வாறு சிக்கும் உணவுப் பொருள்களை இதுவரை அறுவை சிகிச்சை மூலமாகத்தான் மருத்தவர்கள் அகற்றிவந்தனர்.

இந்நிலையில், மூச்சுக்குழாயில் உணவுப் பொருள்கள் சிக்கித் தவிக்கும் குழந்தைகளுக்கு தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நவீன மருத்துவம் மூலம் சிகிச்சை அளித்து அகற்றிவருகின்றனர்.

இது குறித்து தர்மபுரி மருத்துவக்கல்லூரி மருத்துவர் இளங்கோ கூறும்போது, "தர்மபுரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்கள் மட்டும் அல்லாது வெளி மாநிலங்களிலிருந்தும் ஏராளமான குழந்தைகள் மூச்சுக்குழாய், நுரையீரல் பகுதியில் உணவுப் பொருள்கள் சிக்கிக் கொண்டு சிகிச்சைக்காக வருகின்றனர்.

மூச்சுக்குழாயில் சிக்கிய உணவு

அவ்வாறு வரும் குழந்தைகளுக்கு கடந்த காலங்களில் அறுவை சிகிச்சை மூலம் எடுத்துவந்த நிலையில் தற்போது எந்தவித அறுவை கிசிச்சை இன்றி பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு எக்ஸ்ரே, ஸ்கேன் மூலம் மூச்சுக்குழாயில் சிக்கிய உணவுப் பொருள்களைக் கண்டறிந்து எண்டோஸ்கோப் மூலம் அகற்றுகிறோம்.

இதில் 7 மாத குழந்தை முதல் அதிகபட்சமாக 12 வயது வரை உள்ள குழந்தைகள் 2019ஆம் ஆண்டு 12 பேருக்கும், 2020 ஆண்டு 33 பேருக்கும், இம்மாதம் (ஜனவரி) 1 குழந்தைக்கும் இம்மாதிரியான சிகிச்சை அளிக்கப்பட்டு உணவுப் பொருள்களை அகற்றியுள்ளோம்" என்றார்.

மேலும், இந்தச் சிகிச்சை மூலம் 2 மணி நேரத்திற்குள் மூச்சுக் குழாயில் சிக்கிய உணவுப் பொருள்களை அகற்றி, பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளித்து அவர்களை 6 மணி நேரத்திற்குள் வீட்டிற்கே அனுப்பிவிடுவதாகவும், இந்தச் சிகிச்சையினால் எந்தவித வலியோ, தழும்போ ஏற்படாது எனவும் கூறினார்.

Last Updated : Jan 9, 2021, 4:07 PM IST

ABOUT THE AUTHOR

...view details