தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை ஜன.14ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு தருமபுரி மாவட்டத்தில் இன்று நல்லம்பள்ளி வாரச்சந்தை நடைபெற்றது. இதில், மாரண்டஅள்ளி, பாலக்கோடு, தொப்பூர், மிட்டாரெட்டிஅள்ளி மற்றும் சேலம் மாவட்டம் மேச்சேரி, மேட்டூர் பகுதிகளிலிருந்தும் விவசாயிகள் தாங்கள் வளர்த்து வந்த ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். சந்தையில் சுமார் 10ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனையாகி உள்ளதாக கூறப்படுகிறது.
காரிமங்கலம் மற்றும் நல்லம்பள்ளி வாரச் சந்தை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற வாரச்சந்தையில், அதிகாலை 4 மணியிலிருந்தே ஆடுகளை வாங்க பொதுமக்கள் குவிந்தனர். சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆடுகளை வாங்க வந்திருந்ததால் சந்தை முழுவதும் மக்கள் கூட்டம் அலைமோதியது.
சந்தையில் குறைந்த விலையாக ஒரு ஆடு 10 ஆயிரம் ரூபாயில் தொடங்கி 30 ஆயிரம் ரூபாய்வரை விற்பனையானது. சென்ற வாரத்தைவிட இந்த வாரம் ஆடுகளின் விலை சுமார் 2 ஆயிரம் ரூபாய் முதல் 3 ஆயிரம் ரூபாய்வரை உயர்ந்து விற்பனையானது. ஆடுகள் விலை அதிகமாக இருந்தாலும், பொங்கல் பண்டிகைக்கு அடுத்த நாளான கறி நாள் அசைவ விருந்துக்காக, பொதுமக்கள் ஆர்வத்துடன் ஆடுகளை வாங்கி சென்றனர் என்றும், கரோனாவுக்கு பின்னர் இயல்பு நிலை திரும்பியது மகிழ்ச்சி அளிப்பதாகவும் விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரூ.8 கோடிக்கு ஆடுகள் விற்பனை! காரிமங்கலம் மற்றும் நல்லம்பள்ளி வார சந்தையில் இன்று மட்டும் சுமார் 8 கோடி ரூபாய் மதிப்பிலான ஆடுகள் விற்பனை ஆகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.