தருமபுரி: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மண்டலக் கூட்டம் இன்று (டிச.23) தருமபுரியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். ஆலோசனைக் கூட்டத்தில் தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், சேலம், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஜி.கே.வாசன் கூறியதாவது, "சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களில் பெய்த மழையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையாக நிவாரணம் வழங்க வேண்டும். தென் மாவட்டங்களில் பெய்த கடுமையான மழையின் காரணமாக தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கும் தமிழ்நாடு அரசு உதவ பணியாற்ற வேண்டும்.
மத்திய அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டும் என மாநிலங்களவையில் இருமுறை குரல் கொடுத்திருக்கிறேன். நாடாளுமன்றத்தை எதிர்கட்சிகள் முடக்கியிருப்பது அரசியல் நோக்கத்தின் அடிப்படையில்தான் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை. தென்மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள், மழை வெள்ளத்தால் மூழ்கிக் கொண்டிருக்கும்போது, அவர்கள் நாடாளுமன்றத்தில் இருந்து குரல் கொடுப்பதற்காகத்தான் மக்கள் அவர்களை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.
மாறாக நாடாளுமன்றத்தை முடக்கி வெளியிலே சென்று, நாடாளுமன்றத்தின் மேலவை தலைவருக்கு அவமரியாதை உண்டாக்கும் செயல்களில் ஈடுபட்டது சிறு பிள்ளைத்தனமாக இருக்கிறது. மக்கள் மன்றத்தில் 150 வருடங்களுக்குப் பிறகு உள்துறை அமைச்சர் மசோதாக்களை புதியதாக கொண்டு வரும்போது, அந்த மசோதாக்களைப் பற்றி விவாதிக்கக்கூடிய பொறுப்பு மற்றும் கடமை எதிர்கட்சிகளுக்கு உண்டு.