தருமபுரி: தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் ஒன்றியத்திற்குள்பட்டது முக்குளம் ஊராட்சி. இந்த ஊராட்சியில் 10 கிராமங்கள் அடங்கியுள்ளன. தமிழ்நாடு அரசு வழங்கும் பசுமை வீடுகள் திட்டம், பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டத்தின்கீழ் வீடுகளைப் பெற இக்கிராம மக்கள், ஊராட்சி மன்ற செயலர், வட்டார வளர்ச்சி அலுவலருக்கு விண்ணப்பித்துள்ளனர். இதன்படி, தகுதியான பயனர்கள் தேர்வுசெய்யப்பட்டு, வீடுகள் ஒதுக்கப்பட்டுவருகின்றன.
இந்தத் திட்டத்தின்கீழ் முனியப்பன், சின்னசாமி என்பவர்கள் அரசு வீடு கேட்டு விண்ணப்பித்திருந்தனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சின்னசாமி, முனியப்பன் இருவரும் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், ஊராட்சி மன்றத் தேர்தல் நடைபெற்று, உள்ளாட்சி அமைப்புக்கான புதிய பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். சின்னசாமி மனைவி தேவகி, புதிய ஊராட்சி மன்றத் தலைவரிடம் இலவச வீடு வழங்க வேண்டி விண்ணப்பித்துள்ளார்.
அதற்கு புதிய ஊராட்சி மன்றத் தலைவர், சின்னசாமி பெயரில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வீடு வழங்கப்பட்டுள்ளது. ஒரு பயனாளிக்கு, இரண்டு முறை வீடு வழங்க முடியாது என பதிலளித்துள்ளார். இன்னும் கூரை வீட்டில் இருக்கும் தனக்கு அரசு வீடு ஏதும் வழங்கவில்லை என தேவகி தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து பயனாளிகளின் பட்டியலைச் சரிபார்த்ததில், சிறப்பு அலுவலர், ஊராட்சி செயலர் இணைந்து, கடந்த சில ஆண்டுகளுக்கு முன், போலி ஆவணங்களைத் தயாரித்து, இறந்தவர்களுக்கு வீடுகளை ஒதுக்கி பல லட்சம் ரூபாய் பணம் மோசடி செய்ததாக கூறப்படுகிறது.