ஊரடங்கு உத்தரவின் காரணமாக அனைத்து டாஸ்மாக் கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. இதனால், தள்ளாடி வரும் குடிமகன்களுக்காக தள்ளுவண்டி கடை வைத்திருப்பதுபோல் ஆங்காங்கே கள்ளச்சாராயம் காய்ச்சி விற்றுவருகின்றனர்.
இதேபோல், தருமபுரி மாவட்டத்திலும் கள்ளச்சாராயம் அதிக அளவில் காய்ச்சப்பட்டு அதிக விலைக்கு விற்று வருவதாக காவல் துறையினருக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்துள்ளன.
இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜன் உத்தரவின் பேரில் தருமபுரி மாவட்டம் பாலக்கோடு, காரிமங்கலம் பகுதியில் காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக மதுபோதையில் வந்த நபரைக் கண்டு அவரிடம் காவல் துறையினர் நடத்திய விசாரணையில், தண்டுகாரனஅள்ளி, மல்லசமுத்திரம், நாகனம்பட்டி, சங்னம்பட்டி ஆகிய பகுதிகளில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சி ஒரு லிட்டர் ஆயிரம் ரூபாய் முதல் ஆயிரத்து 500 ரூபாய் வரை விற்பனை செய்வதாகத் தகவல் தெரிவித்தார்.
அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் சாராயம் காய்ச்சி விற்பனை செய்துகொண்டிருந்த சூரியா (25), பூபதி (28), கோபால கிருஷ்னன் (49) , கந்தசாமி (38) ஆகிய நான்கு பேரையும் கைது செய்தனர்.
சாராய ஊறலை அழித்த காவல் துறையினர் பின்னர், அவர்களிடமிருந்த 20 லிட்டர் கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்து, 200 லிட்டர் சாராய ஊறல்களை அழித்தனர்.
இதையும் படிங்க: கள்ளச்சாராயம் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்- எஸ்.பி. பிரவேஷ்குமார்!