தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தருமபுரியில் தாயை இழந்து தவிக்கும் யானை குட்டிகள்.. வனத்துறை எடுத்துள்ள புதிய முயற்சி!

மாரண்டஹள்ளி அருகே தாயை இழந்து சுற்றித் திரியும் இரண்டு குட்டி யானைகளையும் பாதுகாக்க ஆங்காங்கே உணவுகளை வைத்து வரும் வனத்துறையினர் அவற்றை யானைக் கூட்டத்துடன் சேர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

குட்டி யானை
குட்டி யானை

By

Published : Mar 10, 2023, 11:58 AM IST

Updated : Mar 10, 2023, 2:54 PM IST

தாயை இழந்து பரிதவிக்கும் குட்டி யானைகள்

தருமபுரி:பாலக்கோடு வனச்சரகம், மாரண்டஹள்ளி அருகே 2 குட்டிகளுடன் 2 பெண் மற்றும் 1 மக்னா யானை என 5 யானைகள் ஏரிகளில் முகாமிட்டுக் குளித்தும், விளைநிலங்களில் நுழைந்து பயிர்களைச் சேதப்படுத்தியும் வந்தது. இந்நிலையில், பாலக்கோடு வட்டம் காளிக்கவுண்டன் கொட்டாய் பகுதியில் விவசாய நிலத்தில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி நேற்று முன் தினம் இரவு 2 பெண் மற்றும் மக்னா யானை என மொத்தம் 3 யானைகள் உயிரிழந்தது.

இந்த யானைகளுடன் வந்த 2 குட்டி யானைகள், தாய் உயிரிழந்தது தெரியாமல் பரிதாபமாக அதே பகுதியிலேயே தவிப்புடன் சுற்றி வருகிறது. இந்த இரண்டு குட்டி யானைகளையும் பாதுகாப்பாக மீட்டு முதுமலை சரணாலயத்திலும், யானைகள் கூட்டத்திலும் விடுவதற்குச் சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

இதனைத் தொடர்ந்து தருமபுரி மாவட்ட வனத் துறையினர் மாவட்ட வன அலுவலர் அப்பல்லோ நாயுடு, மண்டல வன கோட்ட அலுவலர் வின்சென்ட், மருத்துவர் பிரகாஷ், பாலக்கோடு வனச்சரகர் நடராஜ் தலைமையிலான வனத் துறையினர், வேட்டைத் தடுப்பு காவலர்கள் யானையைப் பாதுகாப்பாக மீட்பதற்குக் கடந்த இரண்டு நாட்களாகத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

மேலும் யானைக்கு முலாம்பழம், பலாப்பழம், கோசாப் பழம், குளுக்கோஸ், இளநீர் உள்ளிட்ட பல்வேறு வகையான உணவுகளை ஆங்காங்கே வைத்து, கேமரா மூலம் வேட்டை தடுப்பு காவலர்கள் கண்காணித்து வருகின்றனர். இந்த குட்டி யானைகள் உணவை எடுப்பதற்கு வந்தால், பாதுகாப்பாக யானையைப் பிடிப்பதற்கு வலையோடு வனத் துறையினர் காத்திருக்கின்றனர்.

ஆனால் தாயை இழந்த இரண்டு குட்டி யானைகளும் அருகில் உள்ள வாழைத்தோட்டத்திற்குள் நுழைவதும், மீண்டும் தனது தாய் இருந்த இடத்திற்கு வந்து பார்ப்பதும் என சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் யானைகள் உயிரிழந்து இரண்டு நாளான நேற்று (மார்ச் 9) யானைகள் உயிரிழந்த பகுதிக்கு அருகில் உள்ள கல்லாகரம் அருகே இரண்டு குட்டி யானைகளும் சுற்றித்திரிந்துள்ளன. இதனைத் தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட வனத்துறையினர் 30-க்கும் மேற்பட்டோர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

மேலும் வனத்துறையினர் வைத்துள்ள உணவுகளை யானை உண்பதற்கு வந்தால், அப்பொழுது பாதுகாப்பாகப் பிடிப்பதற்குத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மேலும் யானையைப் பிடித்து முதுமலை முகாமிற்கு அழைத்துச் செல்லவும், யானைகள் கூட்டத்தில் சேர்க்கவும் வனத்துறையினர் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: சத்து மாத்திரை சாப்பிடுவதில் போட்டி: ஊட்டியில் பள்ளி மாணவி பலி; ஆசிரியர்கள் சஸ்பெண்ட்!

Last Updated : Mar 10, 2023, 2:54 PM IST

ABOUT THE AUTHOR

...view details