தருமபுரி நகரப் பேருந்து நிலையத்தில் பூக்கள் விற்பனை சந்தை செயல்பட்டு வருகிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து விவசாயிகள் சாகுபடி செய்த பூக்களை, இங்கு மொத்த விலைக்கு விற்பனை செய்வது வழக்கம். இன்று பென்னாகரம், மாரண்டஹள்ளி, பாலக்கோடு, தொப்பூர் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், அதிக அளவு சாமந்திப் பூக்களை விற்பனைக்குக் கொண்டுவந்தனர்.
நாளை ஆயுத பூஜை, நாளை மறுநாள் சரஸ்வதி பூஜை கொண்டாடப்பட உள்ளது. ஏராளமான வியாபாரிகளும் பொதுமக்களும் பூக்கள் வாங்க வந்திருந்தனர். பூக்களின் வரத்து குறைவு காரணமாகவும், பூக்களின் தேவை அதிகரித்ததன் காரணமாகவும், பூக்களின் விலை உயர்ந்து விற்பனையானது.
சந்தையில் பூக்களின் விலை நிலவரம்:
- சாமந்தி பூ கிலோ 30 ரூபாய்க்கு விற்பனையானது நேற்று 160 ரூபாய்க்கு விற்பனையானது. இன்று கிலோ சாமந்தி பூ 250 ரூபாய்க்கு விற்பனையானது.
- செண்டுமல்லி கிலோ 50 ரூபாய்
- கனகாம்பரம் கிலோ 400 ரூபாய்
- குண்டுமல்லி கிலோ 600 ரூபாய்
- பட்டன் ரோஸ் கிலோ 200 ரூபாய்
- பன்னீர் ரோஸ் 200 ரூபாய்
- 20 ரோஸ் கொண்ட ஒரு கட் 50 ரூபாய்
- கோழிக்கொண்டை கிலோ 70 ரூபாய்
- சம்பங்கி பூ கிலோ 200 ரூபாய்
என சந்தையில் இன்று விற்பனையானது. கடந்த சில தினங்களை விட, இன்று அனைத்துப் பூக்களும் விலை உயர்ந்து விற்பனையானது. பூக்களைச் சாகுபடி செய்த விவசாயிகளுக்கும், இது நல்ல லாபத்தைத் தந்துள்ளது. மேலும், நாளை பூக்கள் விலை உயரும் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
விலையேற்றம் குறித்து விவசாயி இந்த ஆண்டு தருமபுரி மாவட்டத்தில் வறட்சி நிலவி வருவதன் காரணமாக விவசாயிகள் குறைந்த அளவே பூக்கள் விவசாயம் செய்திருந்தனர். இதன் காரணமாகவும், தற்போது பூக்களின் தேவை அதிகரித்ததன் விளைவாகவும் விலை உயர்ந்து விற்பனையாவதாக விவசாயிகள் தெரிவித்திருக்கின்றனர்.