தருமபுரி:அரூர் அடுத்த சித்தேரி மலைக் கிராமத்தில் 64 மலைக் கிராமங்கள் அமைந்துள்ளன. இதில் அரசநத்தம், கலசப்பாடி, கருக்கம்பட்டி உள்ளிட்டப் பல்வேறு கிராமங்களுக்கு முறையான சாலை வசதிகள் இல்லை. வனப் பகுதியை கடந்து கிராமங்களுக்கு செல்ல வேண்டிய நிலை இருப்பதால், சாலை அமைக்கப்படாமல் இருந்து வந்தது.
இதனால் கிராம மக்கள் விவசாயப் பொருட்களை விற்பனைக்கு எடுத்துச் செல்லவும், வெளியூர் வேலைக்குச் செல்வதற்கும், மருத்துவமனை செல்ல முடியாமலும் தவித்து வந்தனர். இதனால் சாலை வசதி வேண்டி கிராம மக்கள், மாவட்ட ஆட்சித் தலைவர், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், முதலமைச்சர் தனிப்பிரிவு எனப் பல்வேறு இடங்களில் மனு அளித்தனர். ஆனால், இதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. ஆனால், தேர்தல் நேரத்தில் மட்டும் வாக்குறுதி அளித்துவிட்டுச்சென்றுள்ளனர்.
இந்நிலையில் கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலின்போது, மலைக்கிராம மக்கள் ஒன்றிணைந்து சாலை வசதி, செய்து தர வேண்டி, தேர்தலைப் புறக்கணிப்பதாக தெரிவித்திருந்தனர். இதனையடுத்து திமுக சார்பில் போட்டியிட்ட டாக்டர் செந்தில்குமார் கிராம மக்களிடம் நேரடியாகச் சென்று, தான் வெற்றி பெற்றதும் சாலை அமைத்து தருவதாக உறுதியளித்திருந்தார்.
இதனைத்தொடர்ந்து நாடாளுமன்றத்தில் பேசி கடந்த நான்கு ஆண்டுகளாக சாலை வசதி செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வந்துள்ளார். தற்பொழுது வனப்பகுதியில் உள்ள ஐந்து கிலோமீட்டர் சாலை அமைப்பதற்குத் தேவையான நிலத்தினை தொப்பூர் அருகே உள்ள கம்மம்பட்டி பகுதியில் தேர்வு செய்து, நிலம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.