தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டின் முதல் பால் ஏடிஎம்: விற்பனையில் அசத்தும் வியாபாரி! - milk sales

தருமபுரி: விவசாயிகளிடமிருந்து சுத்தமான, தரமான பாலை நேரடியாகப் பெற்று தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை(MILK ATM) செய்யும் பணியை முருகன் என்னும் வியாபாரி மேற்கொண்டு வருகிறார்.

milk atm

By

Published : Aug 27, 2019, 7:02 PM IST

தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த கொளகம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்த இவர் இளங்கலை வரலாறு பட்டம் படித்து முடித்துவிட்டு கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக, தனது கிராமத்தில் விவசாயிகளிடமிருந்து பசும்பால், எருமைப்பால் வாங்கி, தனியார் நிறுவனத்திற்கு விற்பனை செய்து வந்தார்.

பால் ஏடிஎம்மில் பணம் செலுத்தப்படும் காட்சி

மேலும் நகர்ப்புறங்களில் சுத்தமான பால் கிடைக்காமல் அவதிப்படும் பொதுமக்களுக்கு உற்பத்தியாளர்களிடமிருந்து நேரடியாக பாலை கொண்டு சேர்க்க வேண்டும், விற்பனையை நவீனப்படுத்த வேண்டும் என நீண்ட நாட்களாக திட்டமிட்டு வந்துள்ளார்.

இயந்திரத்திலிருந்து பால் விநியோகிக்கப்படும் காட்சி

அப்போது இணையத்தில் தானியங்கி இயந்திரம் (MILK ATM) மூலம் பால் விநியோகம் செய்யப்படும் இயந்திரத்தின் செயல்பாட்டைக் காணொலியாக பார்த்துள்ளார். இதனையடுத்து அதிலிருந்த தொடர்பு எண்ணிற்கு தொடர்பு கொண்டு, ஹரியானா சென்று ரூ.4 இலட்சம் கொடுத்து தானியங்கி பால் இயந்திரத்தை வாங்கி பால் விநியோகத்தினை தொடங்கியுள்ளார்.

தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் விவசாயிகளிடம் நேரடியாக பெறப்படும், பாலை இருசக்கர வாகனத்தில் எடுத்து வந்து இயந்திரத்தில் நிரப்பி விடுகிறார். இந்த இயந்திரத்தில் 300 லிட்டர் கொள்ளளவு கொண்ட சிறிய தொட்டி, குளிர்சாதன பெட்டியுடன் அமைக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.10, 20, 50, 100 என ரூபாய் நோட்டுகளையும், நாணயங்களையும் இயந்திரத்தில் செலுத்தி பாலை பெற்றுக்கொள்ளலாம்.

பொதுமக்களின் தேவைக்காக, எவ்வளவு பணம் செலுத்துகிறோமோ, அந்தளவிற்குப் பால் வெளியில் வரும். இதில் பணம் செலுத்தும் வசதி மட்டும் இல்லாமல், டெபிட் கார்டு வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. இங்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு டெபிட் கார்டும் இலவசமாக வழங்கப்படுகிறது.

முதல் பால் ஏடிஎம்

வாடிக்கையாளர்கள் தானியங்கி இயந்திரத்தில் பணத்தை செலுத்தி கார்டை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இந்த இயந்திரத்தில் அரூர் நகர் பகுதியில் உள்ள குழந்தைகள், பெண்கள், முதியவர் எனப்பலர் வீட்டிலிருந்து பாத்திரங்களை எடுத்து வந்து பால் வாங்கிச் செல்கின்றனர். ஒரு சிலர் பாத்திரங்கள் இல்லாமல் வந்தால், அவர்களுக்கு மறு சுழற்சி செய்யும் வகையில், பிளாஸ்டிக் பாட்டில்கள் வெவ்வேறு அளவில் வழங்கப்படுகிறது.

இதன் மூலம் பிளாஸ்டிக் பயன்பாடு தவிர்க்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை தொடங்கும் பொழுது, தினமும் 50 முதல் 60 லிட்டர் வரை பால் விற்பனையாகியுள்ளது. தற்போது தினமும் 150 லிட்டர் பால் விற்பனை செய்யப்படுகிறது. இந்த வசதி தமிழ்நாட்டில், அரூர் பகுதியில் தான் முதன் முதலில் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இந்த இயந்திரத்தின் சிறப்பு, பால் வாங்கும் போது பாலில் புரதச் சத்து எந்த அளவு உள்ளது என்பதை துல்லியமாகக் காட்டக்கூடிய கருவியும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பால் ஏடிஎம் அரூர் பகுதி மற்றும் அதன் சுற்றுப் புறப்பகுதியில் உள்ள கிராம மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details