தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர் பகுதியைச் சேர்ந்த சுரேஷ்-நித்யா தம்பதியின் மகன் நிவாஸ் (5). இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடர்ந்து உடல்நலக்குறைவு ஏற்பட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்தார். சிறுவன் நிவாஸின் ரத்தம் பரிசோதனைக்கு அனுப்பியதில் அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதியானது.
இதனைத் தொடர்ந்து, நிவாஸின் பெற்றோர் அவரை அக்டோபர் 11ஆம் தேதி தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டெங்கு சிறப்பு சிகிச்சைப் பிரிவில் சேர்த்தனர். டெங்கு சிறப்புப் பிரிவில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில், நிவாஸ் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில், நிவாஸின் பெற்றோர், உறவினர்கள் மருத்துவர்களின் அலட்சியப் போக்கே சிறுவனின் உயிரிழப்புக்கு காரணம் எனக் குற்றஞ்சாட்டினர்.
இது குறித்து சிறுவனின் தந்தை சுரேஷ் கூறுகையில், தனியார் மருத்துவமனையில் எடுக்கப்பட்ட ரத்தப் பரிசோதனையில் டெங்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்ததாகக் கூறினார். ஆனால், அரசு மருத்துவக்கல்லுரியில் எடுக்கப்பட்ட சோதனையில் டெங்கு இல்லை என மருத்துவா்கள் தெரிவித்து சிகிச்சை அளித்ததாக கண்ணீர் மல்க தெரிவித்தார்.