புதுக்கோட்டை: சில நாட்களுக்கு முன்பு கணவன் - மனைவி இடையே பிரச்சினை தொடர்பான வழக்கில் வழக்கறிஞர் கலீல் ரகுமான், தனது கட்சிக்காரரான பெண் தரப்பிற்காக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சமூக நலத்துறை அலுவலகத்தில் ஆஜராகியுள்ளார். அப்போது கலீல் ரகுமானை, அந்த பெண்ணின் கணவர் ஆரோக்கியராஜ் அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக வழக்கறிஞர் சார்பில், ஆரோக்கியராஜ் மீது திருக்கோகர்ணம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. தற்போது இந்த வழக்கு குறித்து 6 நாட்களாகியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்து கடந்த 7 ஆம் தேதி புதுக்கோட்டை நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது வழக்கறிஞரை தரக்குறைவாக பேசிய ஆரோக்கியராஜ் மீது நடவடிக்கை எடுக்கவும், ஆரோக்கியராஜ் மீது நடவடிக்கை எடுக்காத திருக்கோகர்ணம் காவல் உதவி ஆய்வாளர் சங்கீதா மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்தனர்.
அதனைத்தொடர்ந்து ஆரோக்கியராஜை கைது செய்யாததால், உடனடியாக கைது செய்யவும், திருக்கோகர்ணம் காவல் உதவி ஆய்வாளர் சங்கீதாவை பணியிடை நீக்கம் செய்ய வலியுறுத்தியும் புதுக்கோட்டை வழக்கறிஞர் சங்கத்தினர் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளிக்க சென்றனர். அப்போது காவல் துறையினரால் வழக்கறிஞர்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து வழக்கறிஞர்கள், புதுக்கோட்டை - மதுரை சாலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பாக சாலை மறியல் செய்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வழக்கறிஞர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் வந்து எங்களது கோரிக்கையை கேட்க வேண்டும். இல்லையெனில் போராட்டம் தொடரும் என கூறி மறியலில் ஈடுபட்டனர்.