தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 29, 2023, 4:26 PM IST

ETV Bharat / state

தருமபுரியில் விவசாய நிலங்களை சேதப்படுத்தும் காட்டு யானைகளால் விவசாயிகள் வேதனை!

மாரண்ட அள்ளி அருகே காட்டு யானைகள் விவசாய நிலங்களை சேதப்படுத்துவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்

Etv Bharat
Etv Bharat

விவசாய நிலங்களை சேதப்படுத்தும் காட்டு யானைகளால் விவசாயிகள் வேதனை

தருமபுரி: பாலக்கோடு - மாரண்டஅள்ளி அருகே வனத்திலிருந்து வெளியேறிய மூன்று காட்டு யானைகள் கெங்கபாளையம் உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் புகுந்தது. அங்கு விவசாயிகள் பயிரிட்டிருந்த வாழை, நெல், தக்காளி உள்ளிட்ட விளை பயிர்களை உட்கொண்டும், அதன் பின் விளை பயிர்களை மிதித்தும் சேதப்படுத்தியும் வருவதாக விவசாயிகள் வேதனைத் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து பேசிய விவசாயி முருகன், ”இரவு நேரங்களில் காட்டு யானைகள் விவசாய விளை நிலங்களில் பயிரிட்ட வாழை, நெல், தக்காளி போன்ற பயிர்களை உட்கொண்டும், மிதித்தும் சேதப்படுத்தி வருகிறது. 4 ஏக்கரில் பயிரிடப்பட்ட நெல் பயிரை மிதித்து காட்டு யானைகள் சேதப்படுத்தி உள்ளது. இது குறித்து வனத்துறையிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஆண்டுதோறும் யானையால் ஏற்படும் சேதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாங்கள் கடன் பெற்று விவசாயம் செய்து வருகிறோம். எங்களுக்கு எப்படி கடனை அடைப்பது என்று தெரியவில்லை. சென்ற முறை யானையால் ஏற்பட்ட சேதம் குறித்து மனு அளித்தோம். அப்போதும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை” என வேதனைத் தெரிவித்தார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாலக்கோடு தாலுகா, மாரண்டஹள்ளி அருகே விவசாய நிலங்களில் உணவு தேடி மூன்று பெண் யானைகள், 2 குட்டி யானைகள் நுழைந்தது. அப்போது பயிர்களைப் பாதுகாக்க அங்கு போடப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கி மூன்று பெண் யானைகளும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

ஆனால், தொடர்ந்து காட்டு யானைகள் தண்ணீர் தேடியும், உணவுக்காகவும் வனத்தை விட்டு வெளியே வருவது தொடர் கதையாக உள்ளது. எனவே விவசாயப் பயிர்கள் சேதப்படாதவாறும், அதே நேரத்தில் யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறாதவாறும் இருக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: தருமபுரி: மின் ஒயரில் சிக்கி யானை உயிரிழந்த பதைபதைக்க வைக்கும் காட்சி!

ABOUT THE AUTHOR

...view details