சிறிய வெங்காயம் நடவுப்பணியில் ஆர்வம் காட்டும் விவசாயிகள் - சிறிய வெங்காயம்
தருமபுரி: வெங்காய விலை உயர்வு காரணமாக சிறிய வெங்காயம் நடவுப் பணியில் விவசாயிகள் ஆர்வம் காட்டியுள்ளனர்.
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பென்னாகரம் மாரண்ட அள்ளி, பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் சிறிய வெங்காயம் சாகுபடி செய்துவருகின்றனர்.
கடந்த சில மாதங்களாக சிறிய வெங்காயம் விலை குறைவு காரணமாக இப்பகுதிகளில் சாகுபடியை விவசாயிகள் குறைத்துக் கொண்டனர். தற்போது வெங்காயத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை ஆவதால் வெங்காய சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர்.
அதகபாடி பகுதியிலுள்ள வெங்காய விதை மண்டியில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து விவசாயிகள் தங்களுக்குத் தேவையான விதை வெங்காயங்களை வாங்கிச் செல்கின்றனர். வெங்காய விதை நேர்த்தி செய்யூம் பணியில் 20-க்கும் மேற்பட்ட பெண்கள் ஈடுபட்டுள்ளனர்.
ஒரு கிலோ விதை வெங்காயம் 120 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வெங்காயம் நடவுசெய்து 90 நாள்களில் அறுவடைக்கு வரும் பயிராகும் இன்னும் இரு மாதங்களில் வெங்காயத்தின் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.