தர்மபுரி: நாச்சினாம்பட்டியில் வசிப்பவர் முருகன். இவருக்கு சொந்தமாக 6 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இவருக்கும் சகோதரர்களான குணசேகரன், பழனி ஆகியோருக்கும் இடையே கடந்த 20 வருடங்களாக விவசாய நிலத்தில் வழி பாதை பிரச்னை உள்ளது.
வழி பாதை பிரச்னை
இந்த பிரச்னை குறித்து ஏற்கனவே காவல் நிலையத்தில் வழக்கு இருப்பதாக தெரிகிறது. இதுகுறித்து காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
தற்கொலை மிரட்டல்
இதனால் மனமுடைந்த முருகன் இன்று (ஜூலை. 25) நாச்சினாம்பட்டியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார். சுமார் 3 மணி நேரமாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து முருகன் போராட்டத்தில் ஈடுபட்டார்.
பாதுகாப்பாக மீட்பு
உடனே சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், தீயணைப்பு துறையினர் முருகனிடம் சுமூக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். தொடர்ந்து, அவருடைய கோரிக்கை குறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். பின்னர் தீயணைப்பு துறையினர் முருகனை பாதுகாப்பாக மீட்டனர்.
மேலும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் குடும்பத்துடன் தீக்குளித்து தற்கொலை செய்துகொள்வதாகவும் முருகன் தெரிவித்தார்.
இதையும் படிங்க:சாலை வசதி இல்லை: மார்பளவு நீரில் உடலை சுமந்த அவலம்