தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டை அதியமான் நகரைச் சேர்ந்தவர் அறிவழகன். இவரது மனைவி புவனேஸ்வரி (44). புவனேஸ்வரியின் மகளுக்கு தோஷங்கள் நீக்கித் தருவதாக பேஸ்புக் மூலம் அறிமுகமான அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கூறியுள்ளார். இதனைத்தொடர்ந்து சில நாள்களுக்கு முன் புவனேஸ்வரியின் வீட்டிற்குச் சென்று மாய மந்திர பூஜைகள் செய்து தந்திரமாக வீட்டில் இருந்த ரூ. 6,000 ரொக்க பணத்தை ஏமாற்றி எடுத்துச்சென்றதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று முன்தினம் (பிப்.15) பணத்தை ஏமாற்றிய ஆசாமி மீண்டும் புவனேஸ்வரியின் வீட்டிற்கு கணவர் இல்லாத நேரம் பார்த்து வந்து, அவரிடம் தவறாக பேசியதுடன் தவறாக நடக்க முயற்சி செய்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த புவனேஸ்வரி சத்தம் போட, அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அந்நபரை கையும் களவுமாக பிடித்து, அதியமான்கோட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.