தருமபுரி:நல்லம்பள்ளி அருகே உள்ள அதியமான் கோட்டை பகுதியில் சுமார் 20க்கும் மேற்பட்டோர் வீடுகளில் கொலு பொம்மை செய்து வருகின்றனர். மண்ணைக் கொண்டு அச்சில் கடவுள் பொம்மைகளை வார்த்து அதனை நெருப்பில் சுட வைத்து, சுட வைக்கப்பட்ட சிலைகளுக்கு பல வகையான வண்ணங்களை தீட்டி தத்ரூபமான சுவாமி சிலைகள், கோயில் விக்ரகங்கள் உள்ளிட்ட கொலு பொம்மைகளை தயார் செய்து விற்பனை செய்து வருகின்றனர்.
தற்போது தருமபுரி மாவட்டத்தில் விட்டு விட்டு மழை பெய்து வருவதால் கொலு பொம்மைகளை அச்சில் வார்த்து நெருப்பில் சுட வைக்க முடியாத நிலை உருவாகியுள்ளது. மேலும், பண்டிகை நெருங்கி விட்டதால் குறைந்த அளவில் உற்பத்தி செய்த கொலு பொம்மைகளை மட்டுமே உற்பத்தியாளர்கள் விற்பனை செய்து வருகின்றனர்.
அதியமான் கோட்டையில் உற்பத்தியாகும் கொலு பொம்மைகள் கர்நாடக மாநிலம், பெங்களூரு, மைசூரு உள்ளிட்ட பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதுமட்டுமின்றி, அங்கிருந்து வியாபாரிகள் இங்கு வருகை தந்து கொலு பொம்மைகளை வாங்கிச் செல்கின்றனர்.
மேலும் சேலம், ஈரோடு, நாமக்கல், திருப்பத்தூர் மற்றும் வேலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கும் இங்கிருந்து கொலு பொம்மைகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த கொலு பொம்மைகள் செட்டு செட்டாக விற்கப்படுகின்றன. இந்த கொலு பொம்மை உற்பத்தியாளர்கள் கல்யாண செட், கும்பாபிஷேக செட், ராமர் கல்யாணம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட வகைளிலான செட்டுகளை தயார் செய்து விற்பனை செய்கின்றனர்.