தருமபுரிமாவட்டத்தில் முதன்முறையாக மாலை நேர உழவர் சந்தை செயல்பாட்டுக்கு வந்தது. இது விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் ஐந்து உழவர் சந்தைகள் செயல்பட்டு வருகின்றன. தருமபுரி ஏ.ஜெட்டிஹள்ளி, பென்னாகரம், பாலக்கோடு, அரூர் உள்ளிட்ட ஐந்து இடங்களில் காலையில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று (நவ-14)முதல் சோதனை முறையில் தருமபுரி உழவர் சந்தையில், மாலை நேர உழவர் சந்தை தொடங்கியுள்ளது. மாலை 4 மணிக்குத்தொடங்கி இரவு 8 மணி வரை இச்சந்தை செயல்பட உள்ளது.
காய்கறிகள் கீரை வகைகள், சிறு தானியங்கள், சிறுதானியங்களில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள், எண்ணெய் வகைகள் போன்றவற்றை விவசாயிகள் விற்பனைக்காக வைத்துள்ளனர். மாலை நேரத்தில் உழவர் சந்தை செயல்படுவதால் காலையில் பணிக்குச்சென்று விட்டு மாலையில் வீடு திரும்பும் அரசு ஊழியர்கள் தனியார் நிறுவனத்தில் பணிபுரிபவர்கள், கிராமப்புறத்தில் இருந்து நகரப்பகுதிக்கு வேலைக்குச் சென்று வீடு திரும்புபவர்கள் தங்களுக்குத் தேவையான காய்கறிகளை மாலை நேர உழவர் சந்தையில் வாங்கிச் செல்கின்றனர்.
காலை நேர உழவர் சந்தை போலவே, மாலை நேர உழவர் சந்தை பொதுமக்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது. மாலை நேர உழவர் சந்தைக்கு மக்களிடம் வரவேற்பு கிடைத்தால் இயங்கும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். புதியதாக கடை வைக்க வாய்ப்புகிடைத்த விவசாயிகள் கடைக்கு பூஜை செய்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி வியாபாரத்தைத் தொடங்கினர்.
தருமபுரியில் முதன்முறையாக மாலை நேர உழவர் சந்தை - பொதுமக்கள் மகிழ்ச்சி இதையும் படிங்க:'ஸ்டெர்லைட் ஆலையைத் திற' - துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்தவர்கள் மனு