தருமபுரி மாவட்டம், தென்கரைக்கோட்டை ஊராட்சிக்குட்பட்ட வடகரைப் பகுதியில் சாலை அமைத்து நான்கு நாள்களில் பெயர்ந்து வருவதாக ஈடிவி பாரத் தமிழ்நாடு இணையதளத்தில் செய்தி வெளியானது. இதனையறிந்த தருமபுரி எம்.பி. செந்தில்குமார் தரமற்ற முறையில் அமைக்கப்பட்ட சாலையை மூன்று கிலோமீட்டர் தூரம் நடந்து சென்றே ஆய்வு மேற்கொண்டார்.
சாலை ஆய்வுப் பணியின்போது ஆய்வாளர் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த அலுவலர்களிடம் சாலை தரமற்ற முறையில் அமைக்கப்பட்டுள்ளது குறித்து கேள்வி எழுப்பினார். சாலையமைத்தநேரத்தில் மழை வந்ததால் சாலை பெயர்ந்து வருவதாக அலுவலர்கள் தெரிவித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் தருமபுரி எம்.பி. செந்தில்குமார் பேசுகையில், "தென்கரைக்கோட்டை - வடகரை வரை 2.80 கிலோமீட்டர் தூரம் தார்சாலை அமைக்க மக்களவைத் தேர்தலின்போது மக்கள் கோரிக்கை வைத்தனர். அதன்படி 90 லட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. நேரில் வந்து ஆய்வு செய்தபோது பல்வேறு இடங்களில் தரமற்ற முறையில் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது.
சாலை மீண்டும் போடப்படும் இதுகுறித்து அலுவலர்களுக்குத் தரமான சாலைகள் அமைக்கவும், மீண்டும் கூடுதலாக ஒரு தளம் சாலை அமைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்றார்.
இதையும் படிங்க:வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவிக்கு ரூ.15 லட்சம் ஊக்கத் தொகை - முதலமைச்சர் பாராட்டு