தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சூத்திரதாரி மோடியின் ஆட்டுவிப்பிற்கேற்ப இ.பி.எஸ், ஓ.பி.எஸ் இருவரும் ஆடிகின்றனர் - சீத்தாராம் யெச்சூரி - தர்மபுரி செய்திகள்

தர்மபுரி : சூத்திரதாரியான பிரதமர் மோடியின் கையில் இருக்கும் நூல் அசைவிற்கு ஏற்ப எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர் செல்வமும் பொம்மைப் போல ஆடுகின்றனர் என சிபிஐ (எம்) கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி விமர்சித்துள்ளார்.

சிபிஐ (எம்) கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி
சிபிஐ (எம்) கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி

By

Published : Mar 6, 2021, 3:16 AM IST

நடைபெறவிருக்கும் 2021 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தீவிரமாக பரப்புரையில் ஈடுபட்டுவருகிறது.

அக்கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி தமிழ்நாடு முழுவதும் தொடர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பரப்புரையில் ஈடுபட்டுவருகிறார். அந்த வகையில், தர்மபுரி வள்ளலார் மைதானத்தில், ‘ஆட்சி மாற்றம் நிகழட்டும், தமிழகம் தலை நிமிரட்டும்’ என்ற மண்டல தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.

பரப்புரைக் கூட்டத்தில் தமிழிலேயே தனது உரையை தொடங்கிய அவர் தொடர்ந்து பேசுகையில், “ நான் சென்னை மருத்துவமனையில் தான் பிறந்தேன். இன்று தமிழ்நாட்டில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையின் மீதும் 60,000 ரூபாய் கடன் உள்ளது. தமிழ்நாடு அரசு கடைசி ஐந்து ஆண்டுகளாக புயல், மழை, வறட்சி நிவாரணமாக ஒரு லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாய் வரை மத்திய அரசு கேட்டுள்ளது. ஆனால், மத்திய அரசு வெறும் 6,000 கோடி ரூபாயை மட்டுமே வழங்கியது.

தமிழ்நாட்டை ஆளும் அதிமுக அரசு பாஜக அரசின் அனைத்து கொள்கைகளுக்கும் ஆதரவளித்து வருகிறது. மத ரீதியாக மக்களை பாஜக பிரித்து வருகிறது. தலித், சிறுபான்மையினர், பழங்குடிகள் குறிவைத்து தாக்கப்படுகின்றனர்.

நெய்வேலி அனல் மின் நிலையம், விசாகப்பட்டினம் எஃகு உருக்கு ஆலை, வங்கிகள் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படுகின்றன. ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினத்தில் இரும்பு உருக்காலையை தனியாருக்கு விற்க மத்திய அரசு முயற்சி செய்துவருகிறது. அதனை எதிர்த்து அங்கு நாள் பந்த் நடைபெற்றுள்ளது.

வேளாண் திருத்தச் சட்டங்களை திரும்ப பெறக்கோரி டெல்லியில் 3 மாதங்களுக்கு மேலாக விவசாயிகள் போராடி வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளர். தினோரு முறை பேச்சுவார்த்தை நடத்தியும் இதுவரை தீர்வு காணவில்லை. விவசாயிகளின் கோரிக்கையை மோடி அரசு கேட்க மறுக்கிறது.

தர்மபுரி வள்ளலார் மைதானத்தில் நடைபெற்ற கூட்டத்தில் இருந்து

மத்திய பாஜக அரசால் தமிழ்நாட்டுக்கு எந்தவொரு நன்மையும் இல்லை. தமிழக மக்களுக்கு மத்திய அரசு எதையும் செய்யவில்லை. இருப்பினும், தமிழ்நாட்டில் ஆட்சி செய்து கொண்டிருக்கும் ஆட்சியாளர்கள் மக்கள் விரோத மோடி அரசுக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் அரசியல் ரீதியாக மத்திய அரசால் லாபம் பார்த்துகொண்டிருக்கின்றனர்.

உங்கள் எல்லோருக்கும் தெரியும், தெரு கூத்தில் நாடக சூத்திரதாரியாக இருப்பவர் கூட்டத்தில் எல்லோரையும் ஆட்டி படைப்பார். அதுபோல இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆட்டிப் படைக்கும் பொம்மைகளைப் போல எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர் செல்வமும் ஆடிக்கொண்டிருக்கின்றனர். சூத்திரதாரியான மோடி இவர்கள் இருவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறார்.

கரோனா தொற்றுநோய் பரவல் காரணமாக கடந்த ஓராண்டில் வேலைவாய்ப்பு குறைந்துள்ளது. தமிழ்நாட்டில் சேலம், திருப்பூர், கோவை உள்ளிட்ட நகரங்களில் தொழில் வளர்ச்சி குறைந்துள்ளது.

இதற்கெல்லாம் பதிலளிக்கும் வகையில் தமிழ்நாட்டில் அதிமுக, பாஜக கூட்டணியை தோற்கடித்து, அவர்களுக்கு தமிழக மக்கள் அரசியல் பாடம் புகட்ட வேண்டும். பாஜக - அதிமுக கூட்டணியை வீழ்த்திடவே திமுக தலைமையில் மதச்சார்பற்ற கட்சிகள் பலவும் ஒன்றிணைந்துள்ளன” என்றார்.

இதையும் படிங்க :'அமித் ஷா வருகை மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தும்!'

ABOUT THE AUTHOR

...view details