சாலையை கடந்து செல்லும் காட்டு யானைகள் பாலக்கோடு:தருமபுரி அருகே வனத்தை விட்டு வெளியே வந்த இரண்டு காட்டு யானைகள் கடந்த ஒரு வாரமாக கிராம பகுதிகளில் சுற்றிதிரிந்து வருகின்றன. ஒரு வாரத்திற்கு முன்பு சோம்பட்டியிலுள்ள பவர்க்ரிட் அலுவலக வளாகத்திற்குள் புகுந்திருந்த இரண்டு காட்டு யானைகளை வனத்துறையினர் வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.
ஆனால், வனப்பகுதிக்குள் சென்று, மீண்டும் வெளியே வந்த இரண்டு காட்டு யானைகள், பேடரஅள்ளி, பள்ளிப்பட்டி, பாடி, சோகத்தூர், நக்கல்பட்டி கிராம பகுதிகளில் சுற்றித் திரிந்து வருகின்றன. இந்த யானைகள் தற்போது பாப்பாரப்பட்டி அருகே சாலையை கடந்து பனைக்குளம் ஏரியில் புகுந்துள்ளன.
மேலும், யானைகளை அருகே உள்ள பிக்கிலி வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க தருமபுரி மற்றும் பாலக்கோடு வனத்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது ராகி, சோளம், கரும்பு, போன்றவைகள் அறுவடை காலம் என்பதால் விளைப்பயிர்கள் உண்டு பழகி விட்ட காட்டு யானைகள் மீண்டும் மீண்டும் வனத்தை விட்டு விளைநிலங்களுக்கு படையெடுத்து வருகின்றன.
பனைக்குளம் ஏரியில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளது. இந்த பிக்கலி வனப்பகுதிக்குள் விரட்டியடிக்கும் பணிகளில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், கடந்த ஒரு வாரமாக கிராமப்புறங்களில் சுற்றித் திரியும் இந்த இரண்டு காட்டு யானைகளும், இதுவரை பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தாமல் சுற்றித் திரிகிறது. இன்று காலை போக்குவரத்து அதிகம் மிகுந்த சாலையை எந்த ஒரு அச்சுறுத்தலும் இல்லாமலும், அமைதியான முறையில் சாலையை கடந்து சென்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:ஊருக்குள் புகுந்த யானையால் கிராம மக்கள் அச்சம்!