தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகேயுள்ள வண்ணாத்திபட்டியைச் சேர்ந்தவர் முருகேசன்(48). விவசாயியான இவர் ஆடு மேய்க்கும் தொழில் செய்துவந்தார். முருகேசன் போடூா் சின்னாறு வனப்பகுதி அருகே ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது ஆடு ஒன்று காட்டிற்குள் சென்றுள்ளது. காட்டிற்குள் சென்ற ஆட்டை தேடுவதற்கு வனப்பகுதிக்குச் சென்றுள்ளார்.
அப்போது காட்டிலிருந்த யானை முருகேசனை துரத்தி தாக்கியதாக கூறப்படுகிறது. யானை தாக்கியதில் முருகேசன் படுகாயமடைந்து உயிரிழந்துள்ளார். ஆடு மேய்க்க சென்ற முருகேசன் வீடு திரும்பாத காரணத்தால், அவரது உறவினா்கள் அவரை தேடியுள்ளனா். இன்று உயிரிழந்த நிலையில் சின்னாறு வனப்பகுதியில் சடலமாக கண்டுபிடித்துள்ளனா்.
சம்பவ இடத்தில் இருந்து உடலை ஒகேனக்கல் காவல் துறையினர் மீட்டு, பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனா். உயிரிழந்த முருகேசனுக்கு சஞ்சீவி என்ற மனைவியும், இரண்டு மகனும், ஒரு மகளும் உள்ளனர். விவசாயி ஒருவர் யானை தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து ஒகேனக்கல் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரனை செய்துவருகின்றனா்.
சின்னாறு வனப்பகுதியில் யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு ஒகேனக்கல் வனப்பகுதியில் மரங்கள் காய்ந்து கிடப்பதால், யானைகள் உணவு இல்லாமல் காடுகளிலிருந்து வெளியேறிவருவது வாடிக்கையாகி வருகிறது. வனத்துறையினா் காடுகளை ஒட்டியுள்ள மக்களுக்கு முறையாக விழிப்புணர்வு ஏற்படுத்தி உயிரிழப்புகளை தடுக்கவேண்டும் என சமுக செயற்பாட்டாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.