தருமபுரி மாவட்டம் இலக்கியம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பிடமனேரி ஏரி சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. கடந்த ஒரு வாரமாக தருமபுரியில் பெய்த மழையின் காரணமாக, இன்று ஏரி அதன் முழு கொள்ளளவை அடைந்து, உபரி நீர் வெளியேறி வருகிறது. இதையடுத்து, ஏரிக்கு அருகில் உள்ள சுற்றுப்புற கிராம மக்கள் ஒன்று சேர்ந்து 18 ஆண்டுகளுக்குப் பிறகு, ஏரியில் தண்ணீர் நிரம்பி உள்ளதால் சிறப்பு பூஜை செய்து ஆட்டுக்கிடாவை வெட்டி வழிபாடு செய்தனர்.
நிரம்பி வழியும் பிடமனேரி ஏரி இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், மாவட்ட நிர்வாகத்திடம் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு ஏரியைத் தூர்வார அனுமதி கோரியதாகவும்; ஆனால் மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்க மறுத்து வந்ததையடுத்து, கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஐந்து லட்சம் மதிப்பீட்டில் குடிமராமத்து பணிக்கு நிதி ஒதுக்கப்பட்டதாகவும் தெரிவித்தனர்.
ஆனால், அவை முறையாக நடைபெறாமல் ஏரியின் உட்புறம் உள்ள கருவேல முட்களை மட்டுமே அகற்றியுள்ளனர். தற்போது மழை பெய்ததால் ஏரியில் தண்ணீர் அதிக அளவு வந்து உள்ளது. தாங்கள் கூறியபோது குடிமராமத்துப் பணி செய்திருந்தால், ஏரிப்பகுதி ஆழப் படுத்தப்பட்டிருக்கும். வரத்து கால்வாய்கள் முறையாக தூர்வாரப்பட்டு ஏரிப்பகுதியில் அதிக அளவு தண்ணீரை சேமித்து இருக்க முடியும்.
ஏரி நிரம்பியதால், கிடா வெட்டி சிறப்பு வழிபாடு இந்நிலையில், குடிமராமத்துப் பணிகள் சரிவர நடைபெறாத காரணத்தால், தற்போது குறைந்த அளவு பெய்த மழைக்கே தண்ணீர் நிரம்பி வெளியேறி வருகிறது என கூறுகின்றனர். மேலும் இந்த ஏரி ஒருமுறை நிறைந்தால் சுற்றுப்புற கிராம மக்கள் ஐந்து ஆண்டுகளுக்கு குடிநீர் பிரச்னை இருக்காது. எனவே இனிவரும் காலங்களிலாவது பொதுமக்களின் கோரிக்கைக்கு மாவட்ட நிர்வாகம் செவிசாய்க்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றனர்.