சோதனை நத்தப்படும் பிடிஆர் கிருஷ்ணன் வீடு தருமபுரி: பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வருபவர் கிருஷ்ணன். இவர் கடந்த 2018 - 19 ஆம் ஆண்டுகளில் பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வந்தார். அப்போது அரசின் திட்டங்கள் செயல் படுத்துவதிலும், பென்னாகரம் ஒன்றியத்தில் உள்ள 33 ஊராட்சிகளிலும் பிளீச்சிங் பவுடர் வாங்கியதில் சுமார் 30 லட்சம் ரூபாய் முறைகேடு செய்ததாகப் புகார் எழுந்துள்ளது.
இதையடுத்து, தற்போது பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வரும் கிருஷ்ணன் மற்றும் சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம் பகுதியைச் சேர்ந்த தனியார் நிறுவனங்களைச் சேர்ந்த பாப்பாத்தி, வீரய்யாபழனிவேல், தாகிர்உசேன், வனரோஜா ஆகிய 5 பேர் மீது சேலம் மண்டல லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸ் துணை சூப்பிரண்டு கிருஷ்ணராஜன் நேற்று வழக்குப் பதிவு செய்தனர்.
இதனையடுத்து இன்று காலை 7 மணிக்குத் தருமபுரி லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிசாமி தலைமையிலான 7 பேர் கொண்ட போலீசார் குழு தருமபுரி கருவூல காலணியில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணன் வீட்டில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
மேலும், வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணன் தருமபுரி மாவட்டத்தில் உள்ள மொரப்பூர், காரிமங்கலம், பாலக்கோடு, பென்னாகரம், நல்லம்பள்ளி, தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு ஊராட்சி ஒன்றியங்களில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வந்தார்.
தற்பொழுது பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றிய போது அவர் முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. அதுமட்டுமின்றி இவர் பொது நிதியில் லட்சக்கணக்கில் சுருட்டியுள்ளார்.
ஒரு சிறிய வேலை என்றால் கூட லட்சக்கணக்கில் லஞ்சம் வாங்குவதாகக் கூறப்படுகிறது. அவரை எதிர்த்து ஏதேனும் கேள்வி கேட்டால், தான் அனைத்து வேலைக்கும் கமிஷன் வாங்குவதாகவும், காசு கொடுத்தால் தான் வேலை நடக்கும் எனவும் கூறியதாகக் கூறப்படுகிறது. கிருஷ்ணன் உள்ளிட்ட 5 நபர்கள் தொடர்புடைய சுமார் 10 இடங்களில் தற்போது இன்று காலை (ஜூன்.6) முதல் லஞ்ச ஒழிப்புத்துறையினர் தீவிரமாகச் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: Audio leaks: "அனைத்து டெண்டர்களுக்கும் 1% கமிஷன்" பாப்பிரெட்டிப்பட்டி பிடிஓ வீட்டில் திடீர் ரெய்டு.. பின்னணி என்ன?