தருமபுரி: கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் வெளியேற்றப்படும் உபரி நீர் அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக, தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் சுற்றுலா தலத்தில் நேற்று முதல் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆகையால், சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்குவதற்கு தருமபுரி மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
கேரளா மற்றும் கர்நாடக ஆகிய மாநிலங்களில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. கனமழையினால் கர்நாடக அணைகளான கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு உபரி நீர் தொடர்ந்து அதிகரித்து வருவதால் அணை வேகமாக நிரம்பி வருகிறது.
இதையும் படிங்க:தமிழ்நாட்டில் இரு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!
இந்த நிலையில், இந்த இரண்டு அணைகளில் இருந்தும் சுமார் விநாடிக்கு 20 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் காவிரி ஆற்றில் உபரிநீராக வெளியேற்றப்பட்டு வருகிறது. இன்று (ஜூலை 26) காலை நிலவரப்படி விநாடிக்கு 7 ஆயிரம் கன அடியாக வந்து கொண்டிருந்த நீர்வரத்து 1 மணி நிலவரப்படி, விநாடிக்கு 10 ஆயிரம் கன அடிக்கும் மேலாக அதிகரித்து உள்ளது.
இரு மாநில காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையினால் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதனால், தருமபுரி மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி ஒகேனக்கலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி காவிரி ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொள்ளவும், பரிசல் இயக்கவும் தடை விதித்துள்ளார்.
மேலும், பொதுமக்கள் காவிரி ஆற்றின் கரையோரப் பகுதிக்குச் செல்ல வேண்டாம், கரையோரப் பகுதியில் நின்று செல்ஃபி போண்ற புகைப்படங்கள் எடுக்கவும் தடைவித்துள்ளார். இந்த உத்தரவால் பிரதான அருவி செல்லும் நடைபாதை பூட்டப்பட்டு, காவிரி கரையோரப் பகுதிகளில் போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:மதுபானங்கள் உயர்வுக்கு மகளிர் உரிமைத்தொகை தான் காரணமா? மதுவிலக்கு அமைச்சர் பதில்