தருமபுரி ரயில் நிலையம் அருகே ரயில்வே நிர்வாகத்துக்குச் சொந்தமான இடத்தில் பாலமுருகன் கோயில் உள்ளது. இக்கோயில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு ரயில் நிலையத்தில் பணியாற்றும் அலுவலர்களால் கட்டப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பாலமுருகன் கோயில் ரயில் நிலைய இடத்தில் உள்ளதாகவும், இதற்கு குடமுழுக்கு நடத்தக் கூடாது, கோயிலை இடித்து அப்புறப்படுத்த வேண்டுமென தருமபுரி ரயில் நிலையப் பொறியாளர் ராம் மோகன் என்பவர் கோயில் நிர்வாகக் குழுவினருக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இதனிடையே, பாலமுருகன் கோயில் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் தருமபுரி திமுக மக்களவை உறுப்பினர் செந்தில் குமாரைச் சந்தித்து, கோயிலில் குடமுழுக்கு நடத்த ரயில் நிலைய அலுவலர்கள் தடை விதிப்பதாகவும், அதனை இடித்து அப்புறப்படுத்த முடிவு செய்துள்ளதாகவும், குடமுழுக்கு நடத்த அனுமதி பெற்றுத் தர வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.