தருமபுரி: மக்களவை உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ஒளவையார் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ரூ.11 லட்சம் மதிப்பிலான நவீன வசதிகளுடன் கூடிய கழிப்பறையை தருமபுரி மக்களவை உறுப்பினர் செந்தில்குமார் இன்று திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், "தருமபுரி மாவட்டத்தில் பெண் குழந்தைகள் பருவ வயதை அடைந்த பிறகு பள்ளிக் கல்வி இடைநிற்றல் அதிகரிப்பதற்கு பள்ளிகளில் கழிப்பறை வசதி இல்லாதது காரணமாக அமைந்துள்ளது.
எனவே இடைநிற்றலை தவிர்க்க நவீன வசதிகளுடன் கூடிய கழிப்பிடங்கள் கட்டித் தரப்பட்டுள்ளன.
பாஜக மீது கேள்வி
எம்எல்ஏ அலுவலகத்தில் லாபம் என எழுதி பணம் எண்ணும் எந்திரத்தை வைத்திருக்கின்ற கட்சி தான் பாஜக. எம்.எல்.ஏ. அலுவலகத்தில் எதற்கு பணம் எண்ணும் எந்திரம். என்னை இருபத்தி மூன்றாம் புலிகேசி என்று பேசியிருக்கிறார். வரலாற்றுச் சிறப்புமிக்க படத்தை ஒப்பிட்டு பாராட்டியிருக்கிறார். இதனை நான் நல்ல விதமாக தான் எடுத்து கொள்கிறேன். இதனால் முதலில் நான் அண்ணாமலை அவர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
மேலும், தருமபுரியில் 289 பூத் குரும்பட்டியான் கொட்டாய் பகுதியில் பேசிய அண்ணாமலை தேர்தலில் இந்த பூத்தில் 90 விழுக்காடு வாக்குகளை பாஜக பெற்றுள்ளதாக பேசியிருக்கிறார். அந்த வாக்குச் சாவடியில் பாஜக ஒரே ஓட்டுதான் பெற்றுள்ளது. அந்த பூத் பாட்டாளி மக்கள் கட்சியின் கோட்டையாக உள்ள இடம். பாஜகவிற்கும் பாமகவிற்கு வித்தியாசம் தெரியாமல் பேசிக் கொண்டிருக்கிறார்.
சாலை வசதி
தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஆறு மலை கிராமங்களில் சாலை வசதி இல்லாமல் உள்ளது. இன்னும் ஆறு மாதங்களில், அனைத்து மலை கிராமங்களுக்கும் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வனத்துறை அனுமதி கிடைத்தவுடன் தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மலை கிராமங்களும் சாலை வசதி பெற்ற கிராமங்களாக இருக்கும் என்று தெரிவித்தார்.
தருமபுரி மக்களவை உறுப்பினர் செந்தில்குமார் பேட்டி அதியமான்கோட்டை மேம்பாலப் பணிகள் குறித்து ஏற்கெனவே டெல்லியில் உள்ள அலுவலரிடம் பேசியதாகவும் இதுகுறித்து விரைவில் நடவடிக்கை எடுப்பதாக ரயில்வே நிர்வாகத்தினர் பதிலளித்ததாகவும் தெரிவித்தார்.