தருமபுரி திமுக மக்களவை உறுப்பினர் செந்தில்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணிக்கு பிறந்தநாள் வாழ்த்து ஒன்றே தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்துப் பதிவில், “இனிய இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள், எங்கள் குடும்ப நண்பர் மற்றும் எனது மான்ட்ஃபோர்ட் பள்ளி சீனியர் பாசமிகு தோழர் அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு., அரசியலுக்கு அப்பாற்பட்டு, உங்கள் மீது என்றும் ஒரு தனி அன்பும், மரியாதையும் உண்டு" எனக் குறிப்பிட்டுள்ளார். ‘Wish you a very very happy enjoyable birthday’ எனக் குறிப்பிட்டு அன்புமணியின் புகைப்படத்தைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இரு தினங்களாகவே பாமக நிறுவனர் ராமதாசுக்கும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கும் வன்னியர் உள் இட ஒதுக்கீடு விவகாரத்தில் கருத்து மோதல்கள் ஏற்பட்டன. இந்நிலையில் இக்கருத்து மோதல் குறித்து மக்களவை உறுப்பினர் செந்தில்குமார், பாமக தலைவர் பதிவிற்கு இட்ட பின்னூட்டத்தில் (கமெண்ட்), “ஐயா கடந்த காலங்களில் வன்னியர்களுக்கு நன்மை செய்தவர்கள் திமுக தலைவர் கலைஞர். இட ஒதுக்கீடு கேட்டுப் போராடிய போது ஆட்சியில் இருந்தவர்கள், உங்களை அழைத்துப் பேசாத நிலையில், உங்கள் கோரிக்கையை ஏற்று இட ஒதுக்கீடு வழங்கியது திமுக" எனப் பதிவிட்டிருந்தார்.