தருமபுரி: தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் டி.என்.வி. செந்தில்குமார் திமுகவில் இருந்து விலகுவதாக சில செய்தி நிறுவனங்களில் செய்தி வெளியாகி இருந்தது. தற்போது இந்த சர்ச்சை இணையத்தில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில், இதுகுறித்து தருமபுரி எம்பி செந்தில்குமார் ஈடிவி பாரத் தமிழ் செய்திகளுக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார்.
இதுகுறித்து, ஈடிவி பாரத் சார்பில் தருமபுரி எம்பி செந்தில்குமாரிடம் கேட்டபோது, "சமூக வலைதளத்தில் மற்றும் ஒரு செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தி தவறானது. வேண்டுமென்று உள்நோக்கத்துடன் இதுபோன்ற போலி செய்திகளை பதிவிட்டு வருகிறார்கள். தவறான செய்தியை வெளியிட்ட அந்த செய்தி நிறுவனம் மீது வழக்கறிஞர்கள் மூலம் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள இருக்கிறேன் என்றார்.
உங்கள் மீது ஏன் இது போன்று உண்மைக்கு மாறான செய்திகள் வெளி வருகிறது என்ற கேள்விக்கு, தமிழகத்தில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களில் தருமபுரி நாடாளுமன்றத் தொகுதிக்கு அதிகளவு திட்டங்களையும், நிதிகளையும் பெற்று கொடுத்திருக்கிறேன். நாடாளுமன்ற வருகையில் 100% கலந்து கொண்டு இருக்கிறேன். பல விவாதங்களில் கலந்து கொண்டிருக்கிறேன்.
தருமபுரி மக்கள் முன்னேற்றத்திற்கு தொடர்ந்து பல முயற்சிகளை செய்து, பல்வேறு திட்டங்களை தருமபுரி தொகுதி மக்களுக்கு கொண்டு வந்திருக்கிறேன். மக்களிடம் நல்ல பெயர் இருக்கிறது. ஆகையால் சிலர் வேண்டுமென்றே இது போன்று பதிவிடுகிறார்கள் என கூறினார்.