இந்தியாவில் கோவிட்-19 வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. மக்கள் ஒரே இடத்தில் ஒன்றுகூடுவதைக் கூடுமானவரைத் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
முன்னதாக, தமிழ்நாட்டில் பி.பி.இ. எனப்படும் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களுக்கும் முகக்கவசங்களுக்கும் பற்றாக்குறை இல்லை என்றும் அவை தேவையான அளவு கையிருப்பில் உள்ளது என்றும் சுகாதாரத் துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது முகக்கவசங்களுக்குப் பற்றாக்குறை உள்ளதாக தருமபுரி மக்களவை உறுப்பினர் செந்தில்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், "தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களுக்கும் முகக்கவசங்களுக்கும் தமிழ்நாட்டில் பற்றாக்குறை இல்லை என்று நீங்கள் (பீலா ராஜேஷ்) உறுதியளித்திருந்தீர்கள்.
இருப்பினும் செங்கல்பட்டு, தஞ்சாவூர் ஆகிய பகுதிகளிலுள்ள மருத்துவக் கல்லூரிகளிலும் மருத்துவமனைகளிலும் இவற்றிற்குப் பற்றாக்குறை உள்ளதாக எனக்குத் தகவல் கிடைத்தது. எனவே, இது குறித்து தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: கரோனா அச்சம் - 215 உணவகங்கள் மூடல்