தர்மபுரி மாவட்டம் தடங்கம் பகுதியில் திமுக சார்பில் 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்று சிறப்புரையாற்றினார்.
அந்த விழாவில் பேசிய திமுக சட்டப்பேரவை உறுப்பினர் தடங்கம் சுப்பிரமணி, " பொதுத்தேர்தலில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஐந்து தொகுதிகளில் திமுக தலைவர் ஸ்டாலின் யாரை வேட்பாளராக நியமிக்கின்றாரோ அவரை வெற்றி பெற வைத்து, ஸ்டாலினை செங்கோட்டைக்கு அனுப்புவதே எங்கள் பிரதான கடமை என்று கூட்டத்தில் பங்கேற்றவர்கள் சபதம் ஏற்க வேண்டும். தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆட்சியைத் தூக்கி எறிய வேண்டும். இரவு பகல் என்று பார்க்காமல் தேனீக்களைப் போல, சங்கு சக்கரங்களை போல சுழன்று சுழன்று பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்ற மு.க. ஸ்டாலினை, நாட்டின் முதலமைச்சராக்கும் வரை உறங்கக் கூடாது, தூங்கக் கூடாது" என்றார். தமிழ்நாடு முதலமைச்சர் என்பதற்கு பதிலாக நாட்டின் முதலமைச்சர் என்றும், செயிண்ட் ஜார்ஜ் கோட்டை என்பதற்கு பதிலாக செங்கோட்டை என்று, தடங்கம் சுப்பிரமணிகூறியது கூட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.