தர்மபுரி: அதிமுக சார்பில் பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே திமுக அரசைக் கண்டித்து முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சா் கே.பி.அன்பழகன், 'திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மை காரணமாக அதிமுக ஆர்ப்பாட்டம் நடத்தக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் சொத்து வரி உயர்த்தப்படவில்லை.
ஆட்சிப் பொறுப்பை ஏற்ற உடனே விடியல் தரப் போகிறோம் என்று பல்வேறு வாக்குறுதிகளை வழங்கினார்கள். ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து, கல்விக்கடன் ரத்து, விலைவாசி குறையும், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் என எதையும் செய்யவில்லை.
எடப்பாடி பழனிசாமி மக்களுக்குப் பாதிப்பு இல்லாமல் நல்லாட்சி நடத்தி வந்தார். தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டத்தை கைவிட்ட அரசு திமுக அரசு. அதிமுக ஆட்சிக்காலத்தில் தமிழ்நாடு மக்களுக்கு வழங்கிய திட்டங்களைத் தவிர்த்து மக்களுக்கு திராவிட முன்னேற்றக் கழக அரசு துரோகம் செய்துள்ளது.