தருமபுரி:தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று (அக்.27) தேமுதிக கட்சி நிர்வாகி இல்ல திருமண விழாவிற்குக் கலந்து கொள்வதற்காகத் தருமபுரி வந்திருந்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த பிரேமலதா விஜயகாந்த் கூறும் போது, "நாடாளுமன்றத் தேர்தல் பணிகளைத் தொடங்கி விட்டோம். உட்கட்சி தேர்தல் முடிந்து விட்டது. கட்சியின் செயற்குழு பொதுக்குழு நடக்க இருக்கிறது முடிவுற்றவுடன் ஜனவரி மாதத்தில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் யாருடன் கூட்டணி, எந்த தொகுதியில் யார் வேட்பாளர் என்பதைத் தலைமை கழகம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும்.
கேப்டன் விஜயகாந்த்தின் உடல்நிலை நன்றாக உள்ளது. எப்போது வர வேண்டுமோ அப்போது வருவார் முக்கியமான தருணங்களில் அனைவரையும் சந்திப்பார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடுத்த வாக்குறுதிகளில் 90% நிறைவேற்றியதாகத் தெரிவித்துள்ளனர். ஆனால், 10% கூட நிறைவேற்றவில்லை. தமிழக வரலாற்றில் இல்லாத அளவிற்கு ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்டிருப்பது, சட்டம் ஒழுங்கை கேள்விக் குறியாக்கியுள்ளது. இந்தியக் குடியரசுத் தலைவர் வரும் நேரத்தில் இந்த சம்பவம் நடைபெற்றிருப்பது, பாதுகாப்பு குளறுபடி என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போலத் தெளிவாகத் தெரிகிறது. திமுக எப்பொழுதெல்லாம் ஆட்சி வருகிறதோ, அப்பொழுதெல்லாம் இந்த வெடிகுண்டு கலாச்சாரம், ரவுடி கலாச்சாரம் தலைதூக்குகிறது.
நீட் தேர்வு இந்தியா முழுவதும் உள்ளது. 50 லட்சம் இல்லை, 50 கோடி கையெழுத்து வாங்கினாலும் நீட் தேர்வை ஒழிக்க முடியாது. அரசியல் ஆதாயத்திற்காக திமுக மாணவர்களைக் குழப்பிக் கொண்டிருக்கிறது. நீட் தேர்வு இல்லை. எந்த தேர்வானாலும் தமிழக மாணவர்கள் எதிர்கொள்வார்கள். நீட் தேர்வை எதிர்ப்பேன் என மாணவர்களை அரசியல் சுய லாபத்திற்காகக் குழப்ப வேண்டும், குறிப்பாக உதயநிதி மாணவர்களைக் குழப்பி வருகிறாரே தவிர, ஒன்றுமே இல்லை. தமிழக மாணவர்கள் அறிவாளிகள், மாணவர்கள் தேர்வுக்குத் தயாராக வேண்டும்.