தர்மபுரி:தடுப்பணைகளின் உயரத்தை அதிகரிக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரூர் அடுத்த சிட்லிங் அருகே கல்வராயன் மலை அடிவாரத்திலிருந்து கல்லாறு உருவாகிறது. இந்தக் கல்லாறு சுமார் 50 கிலோ மீட்டர் தூரம் பயணித்து பெரியப்பட்டி அருகே தென்பெண்ணை ஆற்றில் கலக்கிறது.
தொடர்ந்து அங்கிருந்து சாத்தனூர் அணையைச் சென்றடைகிறது. இந்தக் கல்லாற்றில் ஆண்டுக்கு மூன்று முதல் 5 முறை தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இந்தநிலையில் கடந்த சில நாள்களாகத் தொடர்ந்து தர்மபுரி மாவட்டத்தில் தினமும் மழை பெய்துவருகிறது. இதில் குறிப்பாக அரூர், கோட்டப்பட்டி, நரிப்பள்ளி, சிட்லிங், சித்தேரி உள்ளிட்ட மலை பகுதிகளில் நல்ல மழை பெய்துவருகிறது.
நேற்று(ஜூலை 4) மாலை மட்டும் அரூர் பகுதியில் 68 மி.மீ அளவு மழை பெய்தது. இதனால் கல்லாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தண்ணீர் சேரும், சகதியுமாகப் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இந்தத் தண்ணீர் தென்பெண்ணையாற்றில் கலந்து, சாத்தனூர் அணைக்குச் செல்கிறது. இந்தக் கல்லாற்றில் ஆங்காங்கே தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன.
ஆனால் தடுப்பணைகளின் உயரம் குறைவாக இருப்பதால், அதிகளவு தண்ணீர் தேக்கி வைக்க முடிவதில்லை. கல்லாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணைகளின் உயரத்தை அதிகரித்து, தண்ணீரை தேக்கி விவசாயம் செழிக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொது மக்களும், விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.