தருமபுரி:கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தருமபுரி திமுக கிழக்கு மாவட்டம் சார்பில் மாவட்டச் செயலாளர் தடங்கம் சுப்பிரமணி தலைமையில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் திமுக தலைமை கழக கொள்கை பரப்பு செயலாளரும், தமிழ்நாடு பாடநூல் கழக வாரிய தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது "உலக வரலாற்றிலேயே யாருக்கும் கிடைக்காத சிறப்பிடம் பெற்றவருக்கு தான் தமிழகம் முழுவதும் நூற்றாண்டு விழா கொண்டாடி வருகிறோம். காரணம் பன்முகத் தன்மை கொண்ட அவர் மற்றும் அவரின் பேச்சு கவிதை நயத்துடன் இருக்கும். கடந்த காலத்தில் திரைப்படத்தில் வெறும் பாடல்கள் மட்டுமே இருந்த நிலையில், என்று பேரறிஞர் அண்ணா, கலைஞர் போன்றோர் திரைப்படத் துறைக்குக் காலடி வைத்தார்களோ, அன்று அவர்கள் எழுதிய கதைகளும் கவிதைகளும் தான் தமிழ் சமுதாயத்தைத் தலைதூக்க வழிவகுத்தது" என்றார்.
மேலும், "அதே போல் திரை உலகில் நடிகர்கள் முதல் இயக்குநர்கள் வரை அவர்கள் தயாரித்த படங்கள் திரையில் காண்பிக்கும் போது எழாத கரகொலி, தானை தலைவர் கலைஞர் திரை, கதை, வசனம் என்று திரையில் காண்பிக்கும் போது மட்டும் தான் கரகொலி விண்ணைப் பிளக்கும்" என்றார். தொடர்ந்து பேசிய அவர், "என்.டி.ஏ என்ற அமாவாசை கூட்டணியை நாட்டை விட்டுத் துரத்தி, இந்தியா என்ற கூட்டணியை ஒருங்கிணைத்து, நாட்டின் புதிய மதச்சார்பற்ற சக்தி மற்றும் இந்தியாவுக்குத் தலைமை உருவாக்குகின்ற ஆக்கப்பூர்வமான திறன் தற்போதைய முதல்வர் மு.க ஸ்டாலினுக்குத் தான் இருக்கிறது.