தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வாச்சாத்தி மலைக் கிராமம் சுமந்த சோகக்கதை.. தொடர்கிறது கண்ணீர்.. - பாலியல் வன்புணர்வு

1992ஆம் ஆண்டு நடந்த வாச்சாத்தி வன்கொடுமை கொடூரம் குறித்து இன்று கேட்டாலும் அந்த கிராம மக்கள் கண்ணீர் ததும்ப பல்வேறு கதைகளை பகிர்கின்றனர்.

கொடூரம் சுமந்த சோகக்கதை
கொடூரம் சுமந்த சோகக்கதை

By

Published : Mar 5, 2023, 11:58 AM IST

கொடூரம் சுமந்த சோகக்கதை

தருமபுரி: வாச்சாத்தி வன்முறை, தமிழ்நாட்டையே உலுக்கிய ஒரு சம்பவம். 1992 ஜூன் 20ஆம் தேதி அன்று, சந்தன மரங்கள் கடத்தி வைக்கப்பட்டு உள்ளதாக கூறி, தருமபுரி மாவட்டம் வாச்சாத்தி கிராமத்தில் காவல்துறையினர், வருவாய்த்துறையினர் மற்றும் வனத்துறையினர் சோதனை நடத்தினர்.

அனைவரது வீடுகளிலும் புகுந்து சோதனை செய்த அதிகாரிகள் அங்குள்ள ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரையும் ஊர் நடுவே அமைந்துள்ள ஆலமரம் அடியில் இழுத்து வந்து சரமாரியாக அடித்து கொடூரமாக தாக்கியதாகவும், 18 பெண்களை அருகில் இருந்த வனத்துறையினர் அலுவலகத்திற்கு இழுத்துச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த கொடூர சம்பவம் தொடர்பாக, அரூரில் அப்போதைய சட்டப்பேரவை உறுப்பினர் அண்ணாமலை, சம்பவம் நடந்த அதே ஆண்டு, காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் புகார் தொடர்பாக போலீசார் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. அதனால் அப்போதைய தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க பொதுச்செயலாளராக இருந்த சண்முகம், சில நிர்வாகிகளுடன் இணைந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

சிபிஐ-க்கு மாற்றம்: இதனை விசாரித்த நீதிமன்றம், வன்முறை தொடர்பாக விசாரணை செய்து, விரிவான அறிக்கை தாக்கல் செய்ய, தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டது. இதையடுத்து தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையத்தின் சார்பில் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையின் அடிப்படையில் அறிக்கை தயார் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது.

அறிக்கையை பார்த்த சென்னை உயர்நீதி மன்றம், வாச்சாத்தி வன்கொடுமை கொடூரம் தொடர்பாக வழக்குப் பதிந்து விசாரணை நடத்த உத்தரவிட்டது. ஆனால் காவல் துறையினரின் விசாரணையில் திருப்தி இல்லை எனக் கூறி, பாதிக்கப்பட்ட கிராம மக்கள், வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்ற கோரிக்கை வைத்தனர். இதையடுத்து வாச்சாத்தி வன்முறை வழக்கு 1996ஆம் ஆண்டு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதில், வழக்கில் தொடர்புடையவர்கள் கைது செயப்பட்டு சேலம் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இந்நிலையில், வழக்கின் விசாரணை கிருஷ்ணகிரி சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. அங்கு சிபிஐ தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் 2006ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் சிபிஐ தரப்பு வழக்கறிஞர்கள் வாதம் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதையடுத்து 2008ஆம் ஆண்டு இந்த வழக்கின் விசாரணை தருமபுரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

குற்றம்சாட்டப்பட்டவர்கள் மனு:வாச்சாத்தி பாலியல் வன்கொடுமையின் போது பணியில் இருந்த தர்மபுரி மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர், துணை ஆட்சியர் ஆகியோரை வழக்கில் சேர்த்து விசாரிக்க வேண்டும் என்று குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பை சேர்ந்த 7 பேர் தர்மபுரி அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இது தொடர்பாக சென்னை உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் வாச்சாத்தி வன்முறை வழக்கை விரைவாக முடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

வழக்கை விசாரித்த சிபிஐ அதிகாரிகள், வனத்துறை அதிகாரிகள் 4 பேர் உள்பட வனத்துறையினர், காவல்துறை, வருவாய் துறையினர் என 215 பேர் மீது பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணையின் போது, குற்றச்சாட்டப்பட்ட 50க்கும் மேற்பட்டவர்கள் இறந்து விட்டனர். மீதமுள்ளவர்களுக்கு ஓர் ஆண்டு முதல் 10 ஆண்டு வரை தண்டனை விதிக்கப்பட்டது.

இதனை எதிர்த்து குற்றம்சாட்டப்பட்டவர்கள் தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதியரசர் வேல்முருகன், அனைத்து தரப்பு வாதங்களை விசாரித்தப் பின், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார். இந்நிலையில், நேற்று (மார்ச்.4) சம்பவம் நடந்த வாச்சாத்தி மலை கிராமத்தில் நேரடியாகச் சென்று ஆய்வு மேற்கொண்டார். அங்கு சம்பவம் நடைபெற்ற ஆலமரம், ஏரிக்கரை, தண்ணீர் டேங்க் உள்ளிட்ட இடங்களை நேரடியாக பார்வையிட்டார்.

நீங்கா வடு:1992-ல் நடைபெற்ற சம்பவம் குறித்து பேசும்போது மக்கள் இன்றும் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். சம்பவம் நடைபெற்றதாக கூறப்படும் ஆலமரம் ஊரின் மையப் பகுதியில் உள்ளது. ஆலமரத்திற்கு மட்டும் பேசும் திறமை இருந்திருந்தால் சாட்சியாக மாறி உண்மை குற்றவாளிகளை நீதிமன்றத்தில் சொல்லியிருக்கும் என்கிறார்கள் கிராம மக்கள்.

இது குறித்து நம்மிடம் பேசிய வாச்சாத்தியை சேர்ந்த செல்வி, "வனத்துறையினர் ஊரில் உள்ள அனைவரையும் அடித்து கொடுமை செய்து, குடியிருக்க வீடு இல்லாமல், குடிக்க தண்ணீர் இல்லாமல் ஊரை நிர்மூலம் ஆக்கி விட்டதாக கூறினார். மேலும் அதிகாரிகள் 18 பெண்களை வனத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், இரவு முழுவதும் அடித்து துன்புறுத்தியதாகவும்" குற்றம்சாட்டினார்.

இதனைத் தொடர்ந்து முதியவர் சந்திரன் (60) பேசுகையில், "பெண்களை இழிவாக நடத்தி அவர்களது மார்பகங்களில் சிகரெட் துண்டுகளால் சூடு வைத்ததாகவும், ஆண்களை அடைத்து வைத்து அடித்து சித்திரவதை செய்ததாகவும் கூறினார். குறிப்பாக பெண்களுக்கு செய்த கொடூரத்தை வார்த்தைகளால் கூற முடியாத என பேசிய அவர், இந்த வன்முறையில் பாதிக்கப்பட்டவர்கள் இன்றளவும் வேலை செய்ய முடியாமல் தவித்து வருவதாக" தெரிவித்தார்.

இதையும் படிங்க: வைச்சான் பாரு ஆப்பு! குடிபோதையில் மாணவர்கள் அட்ராசிட்டி! முன்ஜாமீன் வழங்க நீதிபதி வைத்த ட்விஸ்ட்!

ABOUT THE AUTHOR

...view details