தருமபுரி எம்ஜிஆர் நகர் பகுதியில் சுமார் 2000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இம்மக்கள் நகரப் பகுதிக்கு வருவதற்கும், செல்வதற்கும் ஒரு பாதை மட்டுமே உள்ளது. இந்த பாதையும் ரயில் சுரங்கப் பாதையாக இருக்கிறது. மழைக்காலங்களில் ரயில்வே சுரங்கப் பாதையில் 5 அடி முதல் 6 அடி உயரத்துக்கு மழைநீர் தேங்குவதால் போக்குவரத்து முழுமையாகப் பாதிக்கப்படுகிறது. இப்பகுதி பொதுமக்கள் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில் குமாரிடம் சுரங்கப்பாதை பகுதியைச் சீர்செய்து தரும்படி கோரிக்கைவைத்தனர்.
ரயில் சுரங்கப்பாதையை பார்வையிட்ட எம்.பி செந்தில்குமார் இந்த விவகாரம் குறித்து ரயில் நிலைய அலுவலர்களுக்கு கடிதம் எழுதியதையடுத்து தற்போது இப்பகுதியில் சுரங்கப்பாதை சீரமைக்கும் பணிகள் நடைபெற்றுவருகிறது. மழைநீர் பாதையில் தேங்கி நிற்காமல் வெளியேற வடிகால் அமைத்து சாலையை சீரமைக்க ஒப்பந்ததாரருக்கு உத்தரவிட்டார்.