தர்மபுரி மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பதால் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க இடமில்லாமல் மருத்துவர்கள் திணறுகின்றனர்.
தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் மற்றும் கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். 4 மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் சிகிச்சை பெற வருவதால் இங்குள்ள படுக்கைகள் நிரம்பி வழிகிறது.
இந்நிலையில், தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் தனது முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் முகநூல் பதிவு அப்பதிவில், ’தர்மபுரியை கரோனா ரெட் அலர்ட் மாவட்டமாக அறிவிக்க வேண்டும். பொது ஊரடங்கு கடுமையாக அமல்படுத்த வேண்டும். இறப்பு விகிதம் கட்டுப்பாட்டை மீறி செல்கிறது. மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மருத்துவர்களுடன் தொடர்ந்து ஆலோசனை செய்து வருகிறோம். 450 ஆக்ஸிஜன் படுக்கைகள் அடங்கிய ஆயிரம் படுக்கைகள் நிரம்பிவிட்டன. தர்மபுரி மாவட்டத்தில் தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க பத்தாயிரம் படுக்கை வசதி ஏற்படுத்தி மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் நியமனம் செய்ய வேண்டும்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க:ரெம்டெசிவிர் மருந்து விற்பனை செய்வது மனிதாபிமானமற்ற செயல்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்