சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த பள்ளி ஆசிரியர் - உடல் உறுப்புகளைத் தானம் வழங்கிய மனைவி! தருமபுரிஅருகே மணியம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர், செந்தில்குமார் (45). இவர் தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவியும் ஸ்ரீ நிகேஷ் (14), கவின் நிலவன் (8), என இரண்டு மகன்களும் உள்ளனர்.
செந்தில்குமார் வழக்கம்போல் கடந்த புதன்கிழமை பள்ளி முடித்துவிட்டு மாலை வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர் நடைப்பயிற்சி மேற்கொள்வதற்காக கடத்தூர் ஒடசல்பட்டி சாலை ஓரமாகச்சென்றுகொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனம் மோதி படுகாயம் அடைந்தார். இதனையடுத்து தகவல் அறிந்து வந்த உறவினர்கள், அவரை மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதனையடுத்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று மாலை(ஜூலை 1) செந்தில்குமார் சிகிச்சைப் பலனின்றி மூளைச்சாவு அடைந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க :2020-21 முதலே ஆன்லைன் கலந்தாய்வில் முறைகேடு - மீன்வளப் பல்கலைக்கழகத்தில் அடுத்தடுத்து வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்!
இதன்பிறகு மருத்துவர்களிடம் செந்தில் குமாரின் மனைவி விஜயலட்சுமி மற்றும் அவர் உறவினர்கள் உடல் உறுப்புகள் தானம் செய்வதாகத் தெரிவித்தனர். அதனையடுத்து நேற்று இரவு 10 மணி முதல் இன்று விடியற்காலை 3 மணி வரை விடிய விடிய சுமார் 5 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து செந்தில்குமாரின் உடலில் நல்ல நிலையில் உள்ள இருதயம், நுரையீரல், கிட்னி, கணையம், கண் உள்ளிட்ட முக்கிய உடல் உறுப்புகளை அறுவை சிகிச்சை மூலம் எடுத்து, பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்து சென்னை, வேலூர், சேலம், கோயம்புத்தூர் உள்ளிட்ட மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். கண்களை மட்டும் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நிர்வாகம் பெற்றுக்கொண்டனர்.
இதுகுறித்து மனைவி விஜயலட்சுமி கூறும்போது, 'தன்னுடைய கணவர் தான் எங்களுடைய வாழ்க்கை என்று இருந்தோம். அவர் இல்லாத இந்த வாழ்க்கையை நானும் என் 2 பிள்ளைகளும் எப்படி வாழ்வது என்று தெரியாமல் தவித்து வருகிறோம். இதனால் தமிழக அரசு கருணை அடிப்படையில் வேலை ஒன்று வழங்க வேண்டும்' என்று கோரிக்கை வைத்தார்.
இதையும் படிங்க :விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு - போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்களை அடித்து விரட்டிய போலீஸ்!