9 கின்னஸ் சாதனை படைத்த தந்தையும் மகனும்! தருமபுரி சிறுவனுக்கு குவியும் பாராட்டுகள் தருமபுரி குமாரசாமிபேட்டையைச் சேர்ந்த பழனிக்குமார்-புவனேஸ்வரி தம்பதியினர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில், பணியாற்றி வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு 8 வயதில் அஸ்வின் சுதன் என்ற மகன் உள்ளார். சிறுவன் அஸ்வின் சுதன் குழந்தை பருவத்திலிருந்து சுறுசுறுப்பாக இருந்துள்ளார்.
சென்னையிலிருந்து சொந்த ஊரான தருமபுரிக்கு வரும்போது கண்களில் தென்படுவதை பார்த்து, நினைவில் வைத்துக் கொண்டுள்ளார். இதனை அறிந்த பெற்றோர்கள் சிறுவனின் நினைவாற்றலைக் கண்டு வியந்து போயுள்ளனர். தொடர்ந்து சிறுவனை ஏதாவது ஒரு சாதனையாளராக மாற்ற வேண்டும் எனத் திட்டமிட்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து, இணையத்தில் தேடி பார்த்துள்ளனர்.
அப்போது கின்னஸ் சாதனைப் பட்டியலில் இருந்ததை கண்டறிந்து சிறுவனுக்கு பயிற்சி கொடுக்க தொடங்கியுள்ளனர். இதில் ஒரு நிமிடத்தில் அதிகப்படியான காகித விமானங்களை ஒரு குறிப்பிட்ட இலக்கில் வெற்றிகரமாக செலுத்துதல், மேலும் பள்ளி புத்தக பையில், விரைவாக புத்தகம் உள்ளிட்ட பொருட்களை நிரப்புதல், நிறுவனங்களின் பெயர்களை அவர்களுடைய லோகோவை வைத்து அடையாளம் காணுதல், குறைந்த நேரத்தில் கட்டடம் வடிவமைப்பு செய்தல் போன்ற முயற்சிகளை மேற்கொண்டார்.
இதில் அஸ்வின் சுதன் ஒரு நிமிடத்தில் அதிகப்படியான நிறுவனங்களின் பெயர்களையும், அவர்களுடைய லோகோவை வைத்து அடையாளம் காணுதல் என்ற முயற்சியில் 81 நிறுவனங்களின் பெயர்களையும் அடையாளப்படுத்தி வெற்றி பெற்றார். மேலும் புத்தகப்பையில் புத்தகம், பென்சில் பாக்ஸ், வாட்டர் பாட்டில் உள்ளிட்டவைகளை பையில் வைத்தல், அதேபோல் கட்டட வடிவமைப்பு உள்ளிட்டவைகளில் சாதனை செய்துள்ளார்.
இதனை கின்னஸ் சாதனைக்கு (Guinness World Records) அனுப்பி வைத்து, நடுவர்கள் முன்னிலையில், வெற்றிகரமாக செய்து முடித்துள்ளார். இவ்வாறு கின்னஸ் சாதனைப் படைத்த சிறுவன் அஸ்வின் சுதனின் சாதனையை அங்கிகரீத்து கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்ததற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது. இவ்வாறு இதுவரையில் சிறுவன் அஸ்வின் சுதன் நான்கு கின்னஸ் சாதனைகளைப் படைத்ததோடு, மேலும் புதிதாக அவரது 3 சாதனைகளை கின்னஸுக்கு அனுப்பியுள்ளனர்.
மேலும் சிறுவனுக்கு பயிற்சி கொடுத்து வந்த அவரது தந்தை பழனிக்குமார், காகித விமானங்களை இலக்கில் நிரப்பும் முயற்சியில் ஈடுபட்டார். இதில், அவர் 25 முறை வெற்றி பெற்றார். தொடர்ந்து 3 நிமிடங்களில் அதிகப்படியான காகித விமானங்களை ஒரு குறிப்பிட்ட இலக்கில் வெற்றிகரமாக செலுத்துவது என்ற முயற்சியில் 62 முறை வெற்றி பெற்றார்.
மேலும், ஒருமுறை கூட தவறாமல் அதிகப்படியான காகித விமானங்களை ஒன்றின் பின் ஒன்றாக வெற்றிகரமாக ஒரு குறிப்பிட்ட இலக்கில் செலுத்துதல் என்ற முயற்சியில் 17 முறை வெற்றி பெற்றார். இந்நிலையில் தருமபுரியைச் சேர்ந்த தந்தை மகன் இருவரும் சேர்ந்து இதுவரை 9 கின்னஸ் சாதனைப் படைத்துள்ளனர்.
மேலும், இவரது 3 சாதனைகள் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த சாதனையாளர்களின் வீட்டில் சுவற்றில் புகைப்படம் போல், கின்னஸ் சாதனை சான்றிதழ்கள் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இதில் சிறுவன் அஸ்வின் சுதன் அதிகபட்சமாக ஏழு உலக சாதனைகளைப் படைத்து சாதித்துள்ளார்.
இதுவரை உலக சாதனைப் பட்டியலில் தனி ஒருவர் 10 உலக சாதனைப் படைத்தது மட்டுமே அதிகபட்சமாக இருந்து வருகிறது. அந்த சாதனை பட்டியலையும் முந்திவிட்டு அதிக உலக சாதனைப் படைத்தவர்கள் என்ற சாதனைக்கான முயற்சியில் இச்சிறுவன் இறங்கியுள்ளார். இந்த தந்தை, மகன் மட்டும் உலக சாதனைக்கு சொந்தக்காரர்களாக இல்லை. சிறுவனின் தாத்தா சுப்பிரமணியனும் லிம்கா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் (Limca Book of Records) இடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து இன்று (பிப்.15) செய்தியாளர்களிடையே பேசிய அஸ்வின் சுதனின் தந்தை பழனிக்குமார், 'எனது பையன் அஸ்வின் சுதனுக்கு உலக சாதனை படைக்க வேண்டும் என்பதுதான் ஆசை. எனவே, இதற்காக 7 வயது முதல் அவனது நினைவாற்றலைக் கண்டு அதை வளர்ப்பதற்காக பயிற்சியளித்து வந்தோம். இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ், ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ், வேர்ல்ட் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ், ஒஎம்ஜி புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் ஆகியவற்றில் முயற்சித்தோம். அதில் முதலில் கார்களின் லோகோவை ஒரு நிமிடத்தில் 182 கார்களின் லோகோக்களை அடையாளம் கண்டு கூற முடிந்தது.
இதற்கு முன் இருந்த 150 என்ற ரெக்கார்டை முறியடித்து யாரும் எதிர்பார்க்காத விதமாக 182 என ரெக்கார்ட் செய்து எனது மகன் அசத்தியுள்ளார். மேலும், இத்தகைய திறமைகளை கின்னஸ் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் மூலம் வெளிக்கொண்டுவர நானும் எனது மகனும் ஒன்றாக அமர்ந்து ஆலோசனை செய்து இதுவரையில் 10 கின்னஸ் சாதனைக்கு முயற்சி செய்த நிலையில், 4 சாதனைகளுக்கு கின்னஸ் சான்றிதழ்கள் வாங்கியுள்ளோம். மேலும், 6 கின்னஸ் சாதனையில் வெற்றி பெறுவதாக அறிவிப்பு வெளியாகும்.
தந்தையும் மகனும் கின்னஸில் இடம் பிடித்தற்கான சான்றிதழ்கள் மகனின் ஆர்வத்தை மேலும், அதிகரிக்க நானும் 3 கின்னஸ் சாதனைகளை செய்தேன். தருமபுரியில் ஒரே நாளில் மூன்று கின்னஸ் சாதனை செய்தது என்பது இதுவே முதல் தடவையாகும். எனது மகன் அஸ்வின் சுதன் 10 கின்னஸ் சாதனைக்கு முயன்றதில் 6 கின்னஸ் சாதனை, நான் 3 கின்னஸ் சாதனை என மொத்தமாக 9 கின்னஸ் சாதனைகளை பெற்றுள்ளோம்’ என மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
9 கின்னஸ் சாதனை படைத்த தந்தையும் மகனும்! தருமபுரி சிறுவனுக்கு குவியும் பாராட்டுகள் இதன் மூலம் மொபைல்களில் தங்களின் பொழுதை கழிக்கும் குழந்தைகளுக்கு மத்தியில் வாழ்வில் சாதிக்க எத்தனையோ விஷயங்கள் உள்ளதென சாதித்து காட்டியுள்ள சிறுவன் அஸ்வின் சுதனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. தினமும் டிவியில் நாடகத் தொடர்களைக் கண்டு அவற்றில் மூழ்கிக் கிடக்கும் பெற்றோருக்கு மத்தியில் வாழ்க்கையில் சாதிக்கத் துடிக்கும் தங்களது மகனின் வெற்றிப்பாதைக்கு வெளிச்சமூட்டும் பழனிக்குமார்-புவனேஸ்வரி தம்பதியினர் சிறந்த பெற்றோருக்கு எடுத்துக்காட்டாக திகழ்கின்றனர்.
இதையும் படிங்க: கர்ப்பிணிகளுக்கு வரும் இருதய நோய் பாதிப்பு: ஆய்வுக்கு பிறகு மருத்துவர்கள் கூறும் அறிவுரை என்ன?