தருமபுரி ஒன்றியத்திற்கு உட்பட்ட வெள்ளாளபட்டி பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு ஜானகி என்பவர் ஏணி சின்னத்திலும், மீனாட்சி என்பவர் பூட்டு சின்னத்திலும் போட்டியிட்டனா்.
வாக்கு எண்ணிக்கையில் ஜானகி என்பவருக்கு ஆயிரத்து 140 வாக்குகளும், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட மீனாட்சி என்பவருக்கு ஆயிரத்து 102 வாக்குகளும் கிடைத்ததாகக் கூறி, தேர்தல் நடத்தும் அலுவலர் ஜானகி என்பவரை வெற்றிபெற்றதாக அறிவித்தார்.
பின்னர் சிறிது நேரத்திற்குப் பிறகு 2ஆம் இடம்பெற்ற சுயேச்சை வேட்பாளர் மீனாட்சி என்பவர் வெற்றிபெற்றதாக அறிவிப்பு வெளியானது. இதனால் அதிருப்தி அடைந்த ஜானகியின் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்து, தினமும் போராட்டங்களை நடத்திவருகின்றனா்.
பொதுமக்கள் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் இதனிடையே, இன்று வெற்றிபெற்ற உறுப்பினா்கள் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதனையடுத்து வெள்ளாளபட்டி கிராமத்தினரும், ஜானகியின் உறவினர்களும் ஒன்று திரண்டு வெள்ளாளபட்டி பஞ்சாயத்து அலுவலகம் முன்பு தேர்தல் அலுவலரைக் கண்டித்தும், மறுவாக்குப்பதிவு அல்லது மறுவாக்கு எண்ணிக்கை நடத்தவேண்டும் எனவும் வலியுறுத்தி கைகளில் கருப்புக்கொடி ஏந்தி, கண்டன கோஷங்களை ஏழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அலுவலர்களின் கோரிக்கையை ஏற்று அவர்கள் கலைந்துசென்றனர்.
இதையும் படிங்க: பெரம்பலூரில் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தல் வாக்கு எண்ணிக்கையை மீண்டும் நடத்தக்கோரி போராட்டம்