தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாப்பிரெட்டிபட்டி சட்டமன்ற இடைத்தேர்தல் - தொகுதியின் களநிலவரம்! - இடைத்தேர்தல்

தருமபுரி: நாடாளுமன்றத் தேர்தலோடு 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படும் எனும் அறிவிப்பு, மக்களிடையே புத்துணர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே உற்சாகத்தில் தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டி சட்டமன்றத் தொகுதி மக்களும் உள்ளனர். இந்த தொகுதியின் களநிலவரம் குறித்த சிறு தொகுப்பு..!

பாப்பிரெட்டிபட்டி

By

Published : Mar 29, 2019, 4:22 PM IST

பாப்பிரெட்டிபட்டி தொகுதி:
தொகுதியில் வன்னியர், கொங்கு வேளாள கவுண்டர், தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் சரிசமமாக உள்ளனர். இவர்கள் பெரும்பாலும் கரும்பு, மரவள்ளிகிழங்கு சாகுபடியை நம்பியே உள்ளனர். இதற்காக மிகப் பெரிய தொழிற்சாலை அமைக்க வேண்டும் எனும் கோரிக்கை அப்படியே உள்ளது. தங்களது வாழ்வாதாரத்தை அழிக்கும் சென்னை 8 வழிச்சாலை திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர். இத்திட்டத்தால் ஆட்சியில் உள்ள அதிமுக மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இதனால், இந்த தேர்தலில் விவசாயிகளின் வாக்கு வங்கி, தினகரனின் அமமுகவிற்கு செல்லும் வாய்ப்பு அதிகமுள்ளது. ஏனெனில், இப்பிரச்னைக்காக அமமுக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டது.

அமுமுக

அதிமுகவின் கோட்டை
பாப்பிரெட்டிபட்டி சட்டமன்றத் தொகுதி மொரப்பூா் தொகுதியாக இருந்தபோது திமுக 1989, 1996, 2006 என 3 முறையும், 1984 தேர்தலில் காங்கிரஸ் கட்சியும், 1977, 1980, 1991, 2001 தொகுதி மறுவரையரைக்கு பின் 2011, 2016 என 6 முறை அதிமுக வென்று அதிமுகவின் கோட்டையாக விளங்கியுள்ளது. 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தோ்தலில் அதிமுகவிற்கும், பாமக சத்தியமுர்த்திக்கும் கடும் போட்டி நிலவியது. ஆனால் அதிமுக சார்பில் போட்டியிட்ட பழனியப்பன் வெற்றி பெற்றார். 2016ஆம் ஆண்டு அதிமுக பழனியப்பன் பெற்ற வாக்குகள் 74,234, பாமக சத்தியமூா்த்தி பெற்ற வாக்குகள் 61,521 ஆகும். பழனியப்பன் 12,713 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

அமமுக வேட்பாளர் ராஜேந்திரன்

வேட்பாளர்களின் தனிப்பட்ட செல்வாக்கு
2019 இடைத்தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிடும் டி.கே. ராஜேந்திரன், தருமபுரி நகரப் பகுதியைச் சார்ந்தவர். முன்னாள் அமைச்சர் பழனியப்பனின் அரசியல் முன்னோடி என்பதால், இவருக்கு தொகுதியில் ஓரளவு செல்வாக்கு உள்ளது. திமுக சார்பில் போட்டியிடும் மணி, இத்தொகுதிக்கு புதியவர் என்பதால் தொகுதி மக்களிடம் பெரிய அறிமுகம் இல்லை. அதிமுக சார்பில் போட்டியிடும் கோவிந்தசாமி, தருமபுரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இலக்கியம்பட்டி பகுதியைச் சார்ந்தவர். அதிமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் என்பதால் தருமபுரி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் இவர் செல்வாக்கு மிக்கவராக இருக்கிறார். ஒப்பந்ததாரராக இருந்ததால் தொகுதி மக்களிடம் ஓரளவு அறிமுகமானவராக உள்ளார்.

தொகுதியில் மும்முனை போட்டி
அதிமுகவின் கோட்டையாக விளங்கும் பாப்பிரெட்டிபட்டி சட்டமன்றத் தொகுதியில் அதிமுக, திமுக மற்றும் அமமுக என மும்முனைப் போட்டி நிலவுகிறது. இத்தொகுதியில் அதிமுக கூட்டணியில் உள்ள பாமகவின் செல்வாக்கு அதிகமுள்ளதால், அதிமுகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. அதற்கு அடுத்தபடியாக திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளதால் இரண்டாமிடத்தில் உள்ளது. அமமுகவிற்கு கொங்கு வேளாளர் சமூகத்தின் வாக்குகளும், முன்னாள் அமைச்சர் பழனியப்பனின் ஆதரவும் அதிக வாக்குகளை பெற்றுத்தரும்.

திமுக-விசிக கூட்டணி

கூட்டணி கட்சிகளின் இன்றைய பலம்
அதிமுக பாமக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு ஓரளவு பிரகாசமாகவே உள்ளது. ஏனெனில், கடந்த சட்டமன்றத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி தனியாக நின்று இரண்டாவது இடத்தை பெற்றது. இத்தோ்தலில் பாமகவின் வன்னியா் சமுக வாக்குகள் மற்றும் அதிமுக வாக்குகளை கணக்கிடும்போது கோவிந்தசாமிக்கு வெற்றி வாய்ப்புள்ளது. அமமுகவை பொறுத்தவரை டி.கே. ராஜேந்திரனுக்கு, மாற்று சமூகத்தைச் சார்ந்தவர்களின் வாக்குகளும், கொங்கு வேளாள கவுண்டர் மற்றும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர்களின் வாக்கும் கிடைக்க வாய்ப்புள்ளது. திமுக வேட்பாளர் ஆ. மணிக்கு திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வாக்குகளும் திமுக வாக்குகளும் கிடைக்கும்.

தேர்தல் பரப்புரையின் நிலை

திமுக வேட்பாளர் ஆ.மணி

அதிமுக வேட்பாளர் கோவிந்தசாமி கூட்டணி கட்சியான பாமகவினர் உடன் சேர்ந்து தொடர்ந்து தொகுதிகள் முழுவதும் நிர்வாகிகளை சந்தித்து தனக்கான செல்வாக்கை பயன்படுத்தி தீவிரமாகப் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். அதிமுக வேட்பாளா் கோவிந்தசாமி பல தோ்தல்களில் கள பணியாற்றிய அனுபவத்தால் மக்கள் மனநிலை அறிந்து பரப்புரை செய்து வருகிறார். திமுக வேட்பாளர் ஆ.மணி கடந்த சில நாட்களாக தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளார். ஆனால் அவா் பெரிதும் எதிர்பார்த்த திமுக முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் பரப்புரையில் ஈடுபடாததால் சற்று மந்தமாக உள்ளது. சின்னம் கிடைக்காததால், அமமுக பரப்புரையைத் தொடங்கவில்லை.
பாமக

மக்களின் மனநிலை
இத்தொகுதியில் அதிகமாக கொங்கு வேளாள கவுண்டர் சமூக மக்களும், அதற்கு அடுத்தபடியாக வன்னியர் சமூகமும் உள்ளது. ஆனால், இத்தேர்தலில் போட்டியிடும் மூன்று வேட்பாளர்களும் வன்னியர் சமூகத்தைச் சார்ந்தவர்கள். இதன் காரணமாக தங்கள் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஒருவருக்கு கூட அரசியல் கட்சிகள் சீட்டு வழங்காததால், அச்சமூகத்தினர் கோபத்தில் உள்ளனர். தங்களுடைய வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை தேர்தலில் வெற்றி பெறவைத்து விட வேண்டும் என்று அதிமுக வேட்பாளருக்கு தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனர்.
அதிமுக வேட்பாளர் கோவிந்தசாமி

பாமகவினரும் அதிமுக வேட்பாளா் கோவிந்தசாமியும் பம்பரமாக சுற்றி வேலை செய்கின்றனா். கொங்கு வேளாள கவுண்டர் சமூகத்தைச் சார்ந்த அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சிங்காரத்திற்கு, இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால், அவர் தோ்தல் பணி செய்யாமல் அமைதியாக உள்ளார். இதனால், அவரது ஆதரவாளர்கள் அதிமுகவிற்கு வாக்களிப்பார்களா என்பது கேள்விக்குறியாக உள்ளது. திமுக வேட்பாளா் ஆ.மணி தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் கிராமம் கிராமாக ஓட்டு வேட்டையாடி வருகிறார். மணியின் தேர்தல் பரப்புரை நேரடியாக மக்கள் இருக்கும் இடங்களுக்கு சென்று வாக்கு சேகரித்து வருகிறார். மற்ற அரசியல் கட்சிகள் கூட்டமாக சேர்ந்து பரப்புரை செய்கின்றனா். திமுக வேட்பாளா் தனித்தனியாக சந்தித்து வாக்கு சேகரித்து வருவது குறிப்பிடதக்கது.

பாப்பிரெட்டிபட்டி தொகுதியில் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினா் சிங்காரம் மற்றும் திமுக முன்னாள் அமைச்சா் முல்லைவேந்தன் ஆகியோரின் மௌனத்தை கடந்து அதிமுக, திமுக வேட்பாளா்கள் எப்படி வெற்றிபெற போகிறார்கள் என்பதுதான் பாப்பிரெட்டிபட்டி தொகுதி மக்களின் மனநிலையாக உள்ளது.

ABOUT THE AUTHOR

...view details