தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நிதி ஒதுக்கக் கோரி பிச்சையெடுக்கும் போராட்டத்தை நடத்திய தருமபுரி ஊராட்சி மன்றத் தலைவர்கள்!

தருமபுரி மாவட்டத்திலுள்ள ஊராட்சிகளுக்கு நிதி ஒதுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர்கள் அரை நிர்வாணமாக, திருவோடு ஏந்தி பிச்சை எடுக்கும் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

dharmapuri panchayat leader protest demanding fund
ஊராட்சி மன்றத் தலைவர்கள் நடத்திய பிச்சையெடுக்கும் போராட்டம்

By

Published : Dec 14, 2020, 8:45 PM IST

தருமபுரி: 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆனால், ஓராண்டுகள் ஆகியும் ஊராட்சி மன்றங்களுக்குத் தேவையான நிதி ஒதுக்கப்படவில்லை என குற்றஞ்சாட்டி வந்த ஊராட்சி மன்ற பிரதிநிதிகள், உரிய நிதி ஒதுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் தொடர்ந்து மனு கொடுத்து வந்தனர். இந்நிலையில், தற்போது ஊராட்சி நிர்வாகத்திற்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த நிதியை ஊராட்சித் தலைவர்களுக்கு தெரியாமலே, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலமாக செலவிடப்படுகிறது. அதேபோல், ஊராட்சி செலவினங்களுக்கு ஒதுக்கக்கூடிய முதன்மை நிதியானது, பல்வேறு வகையில் செலவிடப்பட்டு வருவதால், கிராமங்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்யப் பணம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையறிந்து ஊராட்சித் தலைவர்கள் வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் முறையிட்டுள்ளனர்.

நிதி ஒதுக்கக் கோரி பிச்சையெடுக்கும் போராட்டத்தை நடத்திய தர்மபுரி ஊராட்சி மன்றத் தலைவர்கள்

அப்போது, சட்டப்பேரவை உறுப்பினர்களையும், ஆட்சியரையும் கேளுங்கள் என பதிலளிக்கப்பட்டுள்ளது. ஊராட்சிக்கு வருகின்ற நிதியை பகிர்ந்தளிப்பதில் மாவட்ட ஆட்சியர், சட்டப்பேரவை உறுப்பினருக்கு தொடர்பில்லை எனக்கூறி மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டுள்ளனர். இதற்கு உரிய பதில் கிடைக்காததால், திடீரென தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஊராட்சி மன்றத் தலைவர்கள் கூட்டமைப்பினர், அரை நிர்வாண கோலத்தில் திருவோடு கையிலேந்தி பொதுமக்களிடமும், கடைவீதிகளிலும் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், ஊராட்சி மன்றத் தலைவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், ஊராட்சி மன்றத் தலைவர்கள் உடன்படாததால் அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே நிதி கேட்டு ஊராட்சி மன்ற தலைவர்கள் அரை நிர்வாணமாக பிச்சை எடுத்தால், ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க:20% இடஒதுக்கீடு கேட்டு கிராம நிர்வாக அலுவலகங்களில் பாமகவினர் மனு

ABOUT THE AUTHOR

...view details